கொரோனா வைரஸ் காரணமாக நோர்வேயில் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்படுகின்றன.
அங்கு பாலர் பள்ளிகள், பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களை இன்று மாலை 6 மணி முதல் பதினைந்து நாட்கள் மூடுவதற்கு நோர்வே அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக பிரதமர் ஏர்னா சூல்பேர் (Erna Solberg) தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸினால் உலகநாடுகள் ஒரு கடினமான சூழலில் உள்ளநிலையில் நாம் இப்போது எடுத்துவரும் கடுமையான நடவடிக்கைகள் வைரஸைத் தடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என அவர் கூறினார்.
நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் 50 க்கும் மேற்பட்டவர்கள் ஒன்று கூடுவதற்கு அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
சிகையலங்காரம், தோல் பராமரிப்பு, மசாஜ், உடல் பராமரிப்பு, உடற்பயிற்சி நிலையங்கள் அனைத்தும் மூடப்படவேண்டும். மற்றும் பச்சை குத்துதல், கலாசார நிகழ்வுகள், விளையாட்டு நிகழ்வுகள், வணிகங்கள் அனைத்தும் தடைசெய்யப்பட்டுள்ளன.
நீச்சல் குளங்கள் மூடப்படும். புஃபே (Buffet) உணவகங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடைகள் இயல்பாகவே திறந்திருக்கும் என்றும் மக்கள் சாதாரணமாகப் பொருட்களைக் கொள்வனவு செய்லாம் என்றும் சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
போக்குவரத்துக்கள் இயங்கும் எனவும் ஆனால் தேவையற்ற பயணத்தைத் தவிர்க்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
நோர்வே மன்னர் ஐந்தாம் ஹெரால்ட் தெரிவிக்கையில் நாம் எல்லோரும் வைரஸ் நோய்த்தொற்றுக்கு உள்ளாவதைத் தவிர்ப்பது முக்கியமானது என்று கூறியுள்ளார்.
நோர்வேயில் இதுவரையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 621 ஆக உயர்ந்துள்ளது.
நோர்வேயின் அயல்நாடான டென்மார்க்கின் இதேபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.