வடக்கு மாகாணத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் எரிபொருளுக்கு தற்போது தட்டுப்பாடு ஏற்படவில்லை. தட்டுப்பாடு செயற்கையாக உருவாக்கப்பட்டால் கொழும்பிலிருந்து போதிய பொருள்களை வடக்குக்கு அனுப்பிவைக்க துரித நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பீ.எஸ்.எம் சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா வைரஸ் அச்சநிலை ஏற்பட்ட நிலையில் அரசு, பாடசாலைகளுக்கு வரும் 5 வாரங்களுக்கு மேல் விடுமுறை வழங்கியதால் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் எரிபொருள் நிரப்பு நிலையங்கள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் சில்லறை வியாபார நிலையங்களில் மக்கள் கூட்டமாகக் காணப்படுகின்றனர். இந்த நிலமை தெற்கிலும் ஏற்பட்டுள்ளது.
பால்மா வகைகள், பிஸ்கட்டுக்கள், சமையல் எரிவாயு போன்ற அத்தியாவசிய பொருள்களின் யாழ்ப்பாணம் மாவட்ட வழங்குனர்கள் தமது பொருள்களை வழங்க பின்னடிக்கின்றனர் என்று சில்லறை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையிலேயே வடக்கு மாகாண ஆளுநர் இந்த அறிவிப்பை இன்று வியாழக்கிழமை இரவு வெளியிட்டுள்ளார்.
“வடக்கு மாகாணத்தில் அத்தியாவசி உணவுப் பொருள்கள் மற்றும் எரிபொருளுக்கும் தட்டுப்பாடு ஏற்படாது என்று 5 மாவட்டங்களின் அரச அதிபர்களும் தெரிவித்துள்ளனர்.
தற்போது கொரோனா வைரஸ் தொற்றுத் தொடர்பான பதற்றமான நிலமையைப் பயன்படுத்தி அத்தியாவசி உணவுப் பொருள்கள் மற்றும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படுத்தப்படுமாகவிருந்தால், உடனடியாக அவற்றை கொழும்பிலிருந்து தருவிப்பதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பை வழங்கவேண்டாம். எந்தவொரு தடையுமின்றி வடக்கு மக்களுக்கு உணவுப்பொருள்கள் மற்றும் எரிபொருள் வழங்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பீ.எஸ்.எம் சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.