யாழ்ப்பாணத்தில் பால்மா, சீனி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் உணவுப் பண்டங்களை வாங்குவதில் மக்கள் அதிக கவனம் செலுத்தும் நிலையில் அவற்றின் வழங்குனர்கள் பதுக்கலில் ஈடுபடுவதாக உள்ளூர் சில்லறை வியாபாரிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் பல்பொருள் அங்காடிகள் (Food City) மற்றும் சில்லறை வியாபாரிகளிடம் அத்தியாவசிய உணவுப்பொருள்கள் மற்றும் உணவுப் பண்டங்களை அதிகளவில் வாங்குவதில் நுகர்வோர் அதிக கவனம் செலுத்தியுள்ளனர்.
குழந்தைகளுக்கான பால்மா உள்ளிட்ட பால்மா வகைகள், பிஸ்கட்டுகள், சீனி, மா, அரிசி உள்ளிட்ட பொருள்களை பொதுமக்கள் அதிகளவில் கொள்வனவு செய்வதாக பல்பொருள் அங்காடிகளின் உரிமையாளர்கள் மற்றும் சில்லறை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
நாட்டில் கோரானா வைரஸ் அச்சநிலை ஏற்பட்ட நிலையில் அரசு, பாடசாலைகளுக்கு வரும் 5 வாரங்களுக்கு மேல் விடுமுறை வழங்கியதால் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் பல்பொருள் அங்காடிகள் மற்றும் சில்லறை வியாபார நிலையங்களில் மக்கள் கூட்டமாகக் காணப்படுகின்றனர். இந்த நிலமை தெற்கிலும் ஏற்பட்டுள்ளது.
பால்மா வகைகள், பிஸ்கட்டுக்கள், சமையல் எரிவாயு போன்ற அத்தியாவசிய பொருள்களின் யாழ்ப்பாணம் மாவட்ட வழங்குனர்கள் தமது பொருள்களை வழங்க பின்னடிக்கின்றனர் என்று சில்லறை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர், யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் விரைந்து நடவடிக்கை எடுத்து பொருள்களின் விநியோகத்தை சீர் செய்யவேண்டும் என்று சில்லறை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.