நாட்டிற்குள் கொரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புக்கள் குறித்து முன்பே எச்சரிக்கப்பட்டிருந்த போதிலும் விரைந்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாமையே இப்போது வைரஸ் தொற்று நாட்டிற்குள் பரவியமைக்கான காரணமாகும்.
இந்நிலையில் அரச மற்றும் தனியார் துறையினர் ஒன்றிணைந்து கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான விரிவானதொரு செயற்திட்டத்தை உருவாக்குவதுடன்,
அதுகுறித்து நாட்டுமக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் கல்வியமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் வலியுறுத்தியிருக்கிறார்.
மேலும் அதற்கு எவ்வித கட்சிபேதங்களுமின்றி முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்குத் தயாராக இருக்கும் அதேவேளை அரசாங்கம் இவ்விடயம் தொடர்பான உண்மையான தகவல்களை வழங்குவதுடன், பொய்யான வதந்திகளைப் பரப்புவதன் ஊடாக பொதுமக்களை அசௌகரியத்திற்குள்ளாக்கும் குழுக்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
கொவிட் – 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான இலங்கைப் பிரஜைகள் கண்டறியப்பட்ட நிலையில், அதனைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகள் திருப்திகரமானதாக இல்லையெனக் குறிப்பிட்டு இன்று அகிலவிராஜ் காரியவசம் அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கிறார்.
அவ்வறிக்கையில் அவர் மேலும் கூறியிருப்பதாவது,
கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் திருப்தியடைய முடியாத நிலையே காணப்படுகின்றது.
தற்போது உலகளவில் மிகவும் அச்சத்திற்குரிய விடயமாக கொரோனா வைரஸ் தொற்று மாறியிருக்கிறது. இலங்கையிலும் கொரோனா வைரஸ் பரவக்கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாக சுகாதாரப் பிரிவினர் ஏற்கனவே எச்சரித்திருந்த நிலையிலும், உரிய நேரத்தில் இவ்விடயத்தில் தலையீடு செய்து பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரசாங்கம் தவறியிருக்கிறது.
தொற்றுத்தடுப்பு செயற்பாட்டை ஆரம்பத்திலேயே அரசியல் கண்காட்சியைப் போன்று கருதி செயற்பட்டமை கவலைக்குரிய விடயமாகும்.
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காணப்படும் நாடுகளிலிருந்து கொழும்பு கட்டுநாயக்க விமானநிலையத்திற்கு வருகைதரும் பயணிகளைத் தொற்றுத்தடுப்பிற்கு உட்படுத்துவது தொடர்பில் எழுந்திருக்கும் சர்சைக்குரிய குழப்பங்கள் மற்றும் பொறுப்பற்ற செயற்பாடுகள் குறித்து நாட்டுமக்களுக்கும், ஊடகங்களுக்கும் வெளிப்படுத்தாமல், அவற்றை இரகசியமாகச் செய்வதற்கு முனைவது பொறுப்புவாய்ந்த அரசாங்கமொன்றின் செயற்பாடாக இருக்கமுடியாது.
கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காணப்படும் சில நாடுகளிலிருந்து வருகைதந்த விமானங்களில் இருந்த பயணிகள் முறையான தொற்றுநீக்கலுக்கோ அல்லது உரிய பரிசோதனைகளுக்கோ உட்படுத்தப்படாமல் நாட்டிற்குள் அனுமதிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இத்தகைய செயற்பாடுகள் அறிந்துகொண்டே நாட்டுமக்களின் உயிர்களை ஆபத்திற்குள்ளாக்குவதாகும். அதுமாத்திரமன்றி இலங்கையிலும் கொரோனா வைரஸ் பரவும் அச்சம் குறித்து முன்பே எச்சரிக்கப்பட்டிருந்த போதிலும் விரைந்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாமையினாலேயே இப்போது வைரஸ் நாட்டிற்குள் பரவியிருக்கிறது.
நாட்டின் இராணுவவீரர்கள் தமது உயிரைப் பணயம் வைத்து, சில சந்தர்ப்பங்களில் முகக்கவசம் கூட இல்லாமல் தொற்றுத்தடுப்புக் கண்காணிப்பு நிலையங்களில் செயலாற்றுகின்றமை கவலைக்குரிய விடயமாகும்.
இது எமக்கு முற்றிலும் புதியதொரு சவால் என்றாலும், ஏற்கனவே உலக சுகாதார ஸ்தாபனம் உள்ளடங்கலாக பல்வேறு அமைப்புக்களாலும் விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளின் பிரகாரம் ஆரம்பத்திலேயே இதற்கு முகங்கொடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க முடியும்.
எனினும் தொற்றுத்தடுப்பு செயற்பாடுகள் மற்றும் வைத்தியசாலைகள் சிலவற்றில் மருந்துப்பொருட்களுக்கு ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாடு என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு நோக்குகையில், அரசாங்கம் முறையான தயார்ப்படுத்தல்களை மேற்கொள்வதில் தோல்விகண்டிருப்பது தெளிவாகின்றது.
உலகையே உலுக்கியிருப்பதுடன், நாட்டுமக்களை மிகுந்த அச்சத்திற்கு உள்ளாக்கியிருக்கும் இந்த வைரஸ் தொற்றுநோயைப் பயன்படுத்தி, தனிப்பட்ட அரசியல் நலன்களை அடைந்துகொள்ள வேண்டிய தேவை ஐக்கிய தேசியக் கட்சிக்கு இல்லை.
மாணவர்களின் நலனைக் கருத்திற்கொண்டு அனைத்துப் பாடசாலைகளையும், அறநெறிப்பாடசாலைகளையும் மூடுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை முன்னாள் கல்வியமைச்சர் என்ற வகையில் பெரிதும் வரவேற்கின்றேன்.
ஆனால் பாடசாலைகளை மூடுவதனூடாக மாத்திரம் வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்கமுடியாது என அவர் இதன்போது தெரிவித்தார்.