சீன நாட்டு பிரஜைகள் எவரும் மருத்துவ பரிசோதனை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படவில்லை என்று குறிப்பிடப்படும் செய்தி முற்றிலும் பொய்யானது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சீனாவில் இருந்து இலங்கைக்கு வரும் சீன பிரஜைகள் மருத்துவ பரிசோதனைகள் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளமையினால் மக்கள் மத்தியில் மாறுப்பட்ட பல கருத்துக்கள் தோற்றம் பெற்றுள்ளன.
இலங்கையில் அதிகமான சீன பிரஜைகள் தொழில் புரிகின்றார்கள். இவர்கள் இலங்கைக்கு வரும்போது அவர்களின் சொந்த நாட்டிலேயே முழுமையான மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள்.
கடந்த வருடம் புத்தாண்டுக்கு சென்றவர்கள் பலர் நோய் தொற்றுக்குள்ளாகியுள்ளதால் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவில்லை.
இலங்கைக்கு வரும் சீன பிரஜைகளை தனிமைப்படுத்தி மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும் என்று குறிப்பிடுவது சாத்தியமற்ற விடயம்.
நாட்டுக்குள் அவர்கள் வந்ததன் பின்னர் சுகாதார அமைச்சினால் தெரிவுசெய்யப்பட்ட வைத்தியர் குழாமின் ஊடாக இவர்கள் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.
பிற நாடுகளில் இருந்து இலங்கை வரும் பிரஜைகள் மாத்திரமே தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.
மார்ச் 11 ஆம் திகதி வரை 4494 பேர் இது வரை கண்காணிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.அதில் 3035 இலங்கையர்களும் 1153 சீனர்களும் இவ்வாறு கண்காணிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் இத்தாலி மற்றும் தென்கொரியா போன்ற நாடுகளிலுள்ளவர்கள் தனிமைப்படுத்தப்படும் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, சீனாவின் நிலைமை குறைவடைந்துள்ளமையினாலேயே சீனர்கள் குறித்த அச்சமடையாதுள்ளோம்.சீனாவைப் போன்று இத்தாலி போன்ற நாடுகளில் தடைகள் இல்லாதமையினாலேயே அங்கிருந்து வருபவர்களை தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தி தனிமைப்படுத்தி வைக்கப்படுகின்றனர்.
எனவே சீனாவின் நிலைமை குறைவடைந்துள்ளமையினாலேயே சீனர்களை தனிமைப்படுத்தும் நிலையங்களுக்கு அனுப்பப்படவில்லை என்றும் கூறினார்.