ஐக்கிய தேசிய கட்சியின் பிளவுக்கு ரணில் விக்ரமசிங்கவின் சுயநல நடவடிக்கையே காரணமாகும். அவரின் அரசியல் செயற்பாடுகள் எமது நாட்டுக்கு பொருத்தமில்லை என சிறிலங்கா சுதந்திர கட்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமத்திபால தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் பிளவு காரணமாக அரசாங்கம் தேர்தலில் எதிர்பார்க்கும் பெரும்பான்மையை பெற்றுக்கொள்வது தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
பொதுத் தேர்தலில் அரசாங்கம் வெற்றிபெறுவது உறுதியான விடயம். ஜனாதிபதி தேர்தலில் அது ஒப்புவிக்கப்பட்டிருக்கின்றது. ஐக்கிய தேசிய கட்சி அனைவரும் ஓர் அணியில் இருக்கும்போதே இந்த வெற்றியை நாங்கள் அடைந்துகொண்டோம்.
என்றாலும் பாராளுமன்ற தேர்தல் ஜனாதிபதி தேர்தல் போன்றது அல்ல. பல கட்சிகள் போட்டியிடுவதால் வாக்குகள் பிரிந்து செல்லும். என்றாலும் அளிக்கப்படும் மொத்த வாக்குகளில் 60 வீதம் பெற்றுக்கொள்ளப்பட்டால் அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள முடியும்.
அத்துடன் ஐக்கிய தேசிய கட்சியிள் பிளவு எமக்கு சாதகமாக இருந்தாலும் நாட்டின் பலம்பெரும் கட்சிக்கு இந்த நிலை ஏற்படுவதற்கு ரணில் விக்ரமசிங்கவின் சுயநலமே காரணமாகும். 25 வருடங்கள் வரை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக இருந்துவரும் அவர், அடுத்த தலைவர் ஒருவரை உருவாக்கிவிட்டு ஒதுங்கியிருக்கவேண்டிய காலமாகும்.
ஆனால் அவர் தனது சுயநலத்துக்காக கட்சியின் பெரும்பாலானவர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றார்.
அத்துடன் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் செயற்பாடுகள் எமது நாட்டுக்கு பொருத்தமில்லை. மத்திய வங்கி பிணைமுறி மோசடி குற்றச்சாட்டின் பிரதான சூத்திரதாரியாக ரணில் விக்ரமசிங்கவே இருந்தார். அதனால் அவர் பிரதமர் பதவிக்கு பொருத்தமில்லை என தெரிவித்தே நாங்கள் நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்து வெளியேறினோம்.
ஆனால் ஐக்கிய தேசிய கட்சியினரே ரணில் விக்ரமசிங்கவை பாதுகாத்து மீண்டும் பிரதமர் பதவிக்கு நியமித்தனர்.
அன்று இவர்கள் நாங்கள் மேற்கொண்ட நடவடிக்கைக்கு ஆதரவளித்திருந்தால், ஐக்கிய தேசிய கட்சிக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது. அன்று நாங்கள் தெரிவித்ததையே இன்று ஐக்கிய தேசிய கட்சியினர், ரணில் விக்ரமசிங்க வேண்டாம் என தெரிவித்து வருகின்றனர். எனவே ரணில் விக்ரமசிங்கவின் சுயநல நடவடிக்கையால் அவர் மக்களால் நிராகரிக்கப்பட்ட தலைவராக மாறி இருக்கின்றார் என்றார்.