தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள்ளேயே கட்சி தாவி, உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்துள்ளார் கோடீஸ்வரன். தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) அம்பாறை பிரமுகர் கோடீஸ்வரன் தமிழ் அரசுக் கட்சிக்கு தாவியுள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பில், கூட்டணி ஒழுக்கமோ, செயலாளரோ, கூட்டணி பதிவோ கிடையாதென அண்மையில் ஈ.பி.ஆர்.எல்.எவ் பிரமுகர் சர்வேஸ்வரன் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். அது மிக சரியானது.
வயதாலும், சரீரரத்தாலும் பெருத்துப் போய், அடிப்படை அரசியல் ஒழுக்கமெதுவும் இல்லாமல் தமிழ் அரசு கட்சி தலைவர்கள் நடந்து வருகிறார்கள். விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆயுள்காலம், அதன் கூட்டணி ஒழுக்கத்திலேயே உள்ளது.
கூட்டணி ஒழுக்கம் தவறினால், அதன் ஆயுள் காலம் குறையும். கூட்டமைப்பிலிருந்து கட்சிகளும், நபர்களும் இதுவரை வெளியேறியதற்கு ஒரேயொரு காரணம் – தமிழ் அரசு கட்சியின் தலைவர்கள் கூட்டணி ஒழுக்கம் தவறியது தான்.
இதன் தொடர்ச்சியாக, தற்போது மாவை சேனாதிராசாவும் கூட்டணி ஒழுக்கத்தை தவறி, கோடீஸ்வரனை கட்சி தாவ வைத்துள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் உடைவென்பது, தமிழ் தேசியத்திற்கு விரோதமானது. அந்த உடைவிற்கு காரணமாக அமையும் ஒவ்வொரு செயலும், தமிழ் தேசியத்திற்கு விரோதமானதே.
மூச்சுக்கொரு முறை போராட்டம் வெடிக்கும், வெடிக்கும் என மாவை வெடித்துக் கொண்டு, செய்வதெல்லாம் உருட்டுப்பிரட்டு வேலையென்ற அப்பிராயம் தற்போது பலமாக உருவாகி வருகிறது.
தமிழ் தேசிய அரசியல் போராட்ட வரலாற்றில் தற்போது எஞ்சியுள்ள மிகச்சில செயற்பாட்டு பாரம்பரியம் கொண்டவர்களில் மாவை சேனாதிராசாவும் ஒருவர்.
எனினும், அவரது அண்மைய நடவடிக்கைகள் அவரது கடந்த காலத்தையே கேள்வியெழுப்ப வல்லவை. இதில, ரெலோவை உடைத்து கோடீஸ்வரனை எடுத்த விடயமும் ஒன்று.
கோடீஸ்வரன் தமது ஆயுள்கால உறுப்பினர் என மாவை சேனாதிராசா வெளிப்படையாகவே பொய் சொல்லி வருகிறார். மாவை அண்மையில் சொல்லும் இரண்டாவது பொய் இது. முதலாவது பொய்- போராட்டம் வெடிக்கும் என்பது!
கோடீஸ்வரன் தமிழ் அரசு கட்சியின் ஆயுள்கால உறுப்பினர் அல்ல. சந்திரகாந்தனை கடந்த தேர்தலில் தமிழ் அரசு கட்சி களமிறங்கியது.
அவரது ஒன்றுவிட்ட சகோதரனான கோடீஸ்வரனை ரெலோ களமிறக்க, பல தமிழ் அரசு கட்சி பிரமுகர்களே செல்வம் அடைக்கலநாதனை தொடர்புகொண்டு, கோடீஸ்வரனை களமிறக்கி, சந்திரகாந்தனின் வாக்கை உடைக்க வேண்டாம் என கேட்டிருந்தார்கள்.
கோடீஸ்வரன் அரசியல் நிலைப்பாட்டில் உறுதியானவர் அல்லர். இப்பொழுது கூட்டமைப்பிற்குள் கட்சி தாவியுள்ளார். தேர்தலின் பின்னர் அரச தரப்பிற்கு தாவ மாட்டார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இதற்கான முதல் பயிற்சியை இப்பொழுது மாவை சேனாதிராசா வழங்கியுள்ளார்.
மைத்திரியின் ஆட்சிக்காலத்தில் நடத்தப்பட்ட 52 நாள் ஆட்சி மாற்றத்தின்போது, வியாழேந்திரன் கட்சி தாவியிருந்தார்.
அந்த நாட்களை பற்றி தனக்கு நெருக்கமானவர்களுடன் பேசிய வியாழேந்திரன், கட்சி தாவுவது பற்றி கோடீஸ்வரன் தன்னுடன் பேசிக் கொண்டிருந்ததாகவும், தன்னை முதலில் செல்லும்படியும், பின்னால் தான் வருவதாகவும் கூறியதாகவும், ஆனால் இறுதியில் பல்டியடித்து விட்டதாகவும் தெரிவித்ததாக அப்போது செய்திகள் வெளியாகியிருந்தன.
அப்பொழுது நடந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் உள்சுற்று பேச்சு ஒன்றில், மஹிந்த தரப்புடன் இணைய வேண்டுமென சக எம்.பிக்களுடன் கோடீஸ்வரன் பேசிய தகவலை, அப்போது தமிழ்பக்கம் வெளியிட்டிருந்தது.
அரச தரப்புடன் இணைந்து சலுகை அரசியலை அவர் விரும்பியதால்தான், கல்முனை விவகாரத்தில் ரெலோ அழுத்தம் கொடுக்க முயன்றபோது, அதற்கு சம்மதிக்காமல், வரவ செலவு திட்டத்தை ஆதரித்து வந்தார்.
தமிழ் அரசு கட்சி ஒரு கறுப்பாட்டை தீனி போட்டு வளர்க்கிறது.