தமிழகத்தில் பொய் புகார் கூறி ஆசிரியர் சித்திரவதை செய்ததால் மாணவன் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ளது சிந்தலசேரி கிராமம்.
இங்கு வசித்து வரும் வேல்முருகன் ஆரோக்கியம்மாள் தம்பதியருக்கு 2 மகன்கள்.
கூலி வேலை பார்த்து வந்த வேல்முருகன் உடல்நலக் குறைவால் உயிரிழந்த நிலையில் தன் மகன்கள் 2 பேரையும் ஆரோக்கியம்மாள் வளர்த்து வந்தார். இதில் மூத்த மகன் தனுஷ் பத்தாம் வகுப்பு வரை படித்து விட்டு கூலி வேலைக்கு சென்று வருகிறார். இளையமகன் கவியரசன் அங்குள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார்.
அதே ஊரில் வசித்து வரும் செபஸ்டியன் என்பவரின் வீட்டில் இருந்த விவசாய உபகரணங்கள் திருடு போனதாக கூறப்படுகிறது. இதனை ஊர் நாட்டாமையும், பள்ளி ஆசிரியருமான திரவியத்திடம் கூறியுள்ளார். திருடு போனதாக கூறப்பட்ட இடத்திற்கு சம்பவத்தன்னு கவியரசன் தனது நண்பர்களுடன் போனதால் சந்தேகம் முழுக்கவே அவர் மீது திரும்பியது.
இதனால் சந்தேகமடைந்த பள்ளி ஆசிரியர் திரவியம், மாணவன் கவியரசனை குறிவைத்து ஒரு வாரமாக தாக்கி வந்துள்ளார். ஒரு வாரமாக தோட்டத்தில் முட்டி போட வைத்து அடித்து துன்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. பொருட்களை எடுக்கவில்லை என மாணவன் கூறிய பிறகும் துன்புறுத்தல் தொடர்ந்து வந்துள்ளது.
தான் அசிங்கப்படுத்தப்பட்டதை தனது நண்பர்களிடம் சொல்லி அழுத அந்த சிறுவன் மனமுடைந்து போய் யாரும் இல்லாத நேரத்தில் தன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவத்திற்கு காரணமான பள்ளி ஆசிரியர் திரவியம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
இதை தொடர்ந்து சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.