ஐரோப்பா இப்போது கொரோனா வைரஸ் வெடிப்பின் ‘மையமாக’ மாறி வருவதால், உலகநாடுகள் விரைந்து தற்காலிக மருத்துவமனைகளை உருவாக்குமாறு உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
சீனாவைத் தவிர, உலகின் பிற பகுதிகளை விட அதிகமான வைரஸ் பாதிப்புகள் மற்றும் இறப்புகள் ஐரோப்பாவில் பதிவாகியுள்ளன என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் இன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.
மேலும், உலகளாவிய இறப்பு எண்ணிக்கை 5,000 ஐ தாண்டியிருப்பதை “ஒரு சோகமான மைல்கல்” என்று அறிவித்தார்.
ஜெனீவாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘ஐரோப்பா இப்போது தொற்றுநோயின் மையமாக மாறியுள்ளது. ஸ்பெயின் மற்றும் பல்கேரியா இரண்டும் அவசரகால நிலைகளை அறிவித்துள்ளன.
ஐரோப்பாவின் மிக மோசமான வெடிப்பாக, இத்தாலியை அடுத்து ஸ்பெயினில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,200 க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது என பேசியுள்ளார்.
ஐரோப்பாவில் உள்ள பல நாடுகளும் கவலைக்குரிய நோய்த்தொற்று வளர்ச்சியைக் கொண்டுள்ளன. ஐரோப்பிய கண்டத்தில் மட்டும் 22,000 க்கும் மேற்பட்ட புதிய கொரோனா வைரஸ் பதிவுகள் மற்றும் 943 இறப்புகள் இருப்பதாக ஐரோப்பிய நோய்க்கான மையம் கூறுகிறது என தெரிவித்துள்ளார்.