உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தின் வீரியம் அதிகரித்துள்ள நிலையில், இலங்கையர்களை அதிலிருந்து பாதுகாப்பதற்கு இலங்கை அரசாங்கம் கடுமையான திட்டங்களை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறது.
இதுவரை இலங்கையிலும் 5பேர் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு இலக்காகியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், 64 பேருக்கும் அதிகமானவர்கள் கண்காணிக்கப்பட்டுவருவதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதேவேளை, இத்தாலி, தென்கொரியா, ஈரான் நாட்டவர்கள் இலங்கை வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, ஐரோப்பிய நாடுகளுக்கான விசாவினையும் தற்காலிகமாக ரத்துச் செய்வதற்கு ஜனாதிபதியும், பிரதமரும் தீர்மானித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், கொரோனா வைரஸ் COVID 19 தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக நாட்டில் இருந்து வெளியேறுவதை கட்டுப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மறு அறிவித்தல் வரை இந்த நடைமுறை நடைமுறையில் இருக்குமென வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பிலான பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. வெளிநாட்டு வேலைவாய்புப் பணியகத்தின் தலைவரின் தலைமையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் சிரேஷ்ட முகாமையாளர்கள் உட்பட வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளனர்.
முன்னதாக வெளிநாடு செல்வது தொடர்பில் தடை விதிக்கப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையில், தற்போது மறு அறிவித்தல் வரும் வரையில் இது நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.