இந்தியாவுக்கு வந்து என்னுடைய மக்களுக்கு கொரோனா வைரஸை பரப்ப விரும்பவில்லை என்று சீனாவில் இருக்கும் மாணவர் உருக்கமாக வெளியிட்டிருக்கும் வீடியோ சமூகவலைத்தளங்களில் பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.
சீனாவின் வான்லி மாகாணம், நாச்சிங் நகரில் உள்ள பல்கலைக் கழகத்தில் இந்தியர்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் அங்கு உள்ள விடுதியில் தங்கி மருத்துவம் படித்து வருகின்றனர்.
கொரோனா வைஸ் பிரச்சனையால் இந்த பல்கலைக் கழகத்தில் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பி விட்டனர்.
ஆனால் சிலர் மட்டுமே அங்கே தங்கி உள்ளார்கள். அவர்களில் கர்நாடக மாநிலம், துமகூருவின் ஒசகெரேவைச் சேர்ந்த சாஹில் உசேனும் ஒருவர்.
இவர் கொரோனா அச்சுறுத்தலுக்கு நடுவே வீடு திரும்ப மறுத்து, விடுதியில் தங்கியுள்ளார்.
இதையடுத்து சீனாவில் கொரோனா வைரஸ் பரவுவதால் தனது மகனை உடனடியாக இந்தியாவுக்கு திரும்பும்படி அவரது தந்தை ரிஸ்வான் வலியுறுத்தினார். ஆனால் அதை ஏற்க மறுத்த உசேன், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ‘நான் இப்போது நலமுடன் உள்ளேன். சீனாவில் இருந்து கர்நாடகாவுக்கு நேரடி விமானங்கள் இல்லை. மூன்று விமானங்கள் மாற வேண்டும். ஒருவேளை நான் அங்கு வந்தால் பயணத்தின் போது, எனக்கு ஒரு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு அதை என் நாட்டிற்கு குறிப்பாக கர்நாடகாவில் பரப்பினால், அது ஒரு பிரச்னையாகி விடும். ஆகவே நான் இங்கே தங்கி இருக்க விரும்புகிறேன்.
முகக்கவசம் அணிந்து தனது விடுதி அறையிலிருந்து வெளியே செல்லும் உசைன், முழு பல்கலைக்கழக வளாகத்தையும் சுற்றி நடந்து காண்பித்தார். கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க சீன அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளையும் குறிப்பிட்டார்.