எல்பிட்டிய மற்றும் வெலிகந்த பகுதிகளில் நேற்று இடம்பெற்ற வீதி விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எல்பிட்டிய – அளுத்கம வீதி, அட்டகொஹொட சந்திக்கருகில் சனிக்கிழமை முற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். எல்பிட்டிய நோக்கி பயணித்த பஸ்ஸொன்று எதிர்த்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தொலஇஹல – நவதகல பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞனே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும், வெலிகந்த பகுதியில் சனிக்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த வீதியில் மதுரங்கல நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளொன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
வெலிகந்த – றுஹுணுகெத பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய நபரே விபத்தில் உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வுருகின்றனர்.