இத்தாலியில் அசுர வேகத்தில் பரவும் கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றுக்கு ஒரே நாளில் 368பேர் உயிரிழந்துள்ளதாக நாட்டின் சிவில் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1809ஆக அதிகரித்துள்ளது.
மேலும், 21,157ஆக இருந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,747ஆக உயர்ந்துள்ளது.
இத்தாலியின் வடக்கு பிராந்தியத்தில் முதலில் பரவிய கொரோனா வைரஸ் கிட்டத்தட்ட 10இற்க்கும் மேற்பட்ட நகரங்களில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ரோம், மிலான், வெனிஸ் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் வெளியே வருவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வேகமாகப் பரவி வருவதால் மக்கள் வெளியிடங்களுக்கு செல்லவேண்டாம் என்றும், மருந்து, உணவு போன்ற அத்தியாவசியப் பொருட்கள் வாங்க மட்டுமே வெளியில் வரும்படியும், வீட்டிலேயே இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் போதுமான படுக்கைகள் இல்லாத நிலையில் சிகிச்சைக்காக வரும் 80 வயதுக்கு மேற்பட்டோரையும், உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருபவர்களையும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்க வேண்டாம் என்று இத்தாலியின் பேரிடர் மேலாண்மை அமைப்பு அறிவுறுத்த முடிவு செய்துள்ளது.
அதாவது, 80 வயதுக்கு மேற்பட்டோரையும், மிகவும் கவலைக்கிடமாக இருப்போரையும் காப்பாற்றுவதற்காக மருத்துவர்கள் தீவிர கவனம் செலுத்த வேண்டாம் என்றும், அவர்களை மரணிக்க விட்டுவிடலாம் என்பதும் இதற்கு மறைமுக அர்த்தமாகப் பார்க்கப்படுகிறது.
மேலும், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறவரும் நோயாளிகளுக்கு சில தகுதிகளை ஏற்படுத்தி அவர்களை மட்டும் ஏற்றுக்கொள்ளவும் திட்டமிடப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
அதாவது 80 வயதுக்குள் இருப்பவர்களை அனுமதிப்பது, உடல்நிலையில் ஏற்கனவே இருக்கும் பிரச்னைகளை அடிப்படையாக வைத்து (5இற்கும் குறைவான பிரச்னைகள் இருந்தால் தீவிர சிகிச்சையில் அனுமதிப்பது) போன்ற கட்டுப்பாடுகளையும் விதிக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
அனைவருக்கும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி அளித்து சிகிச்சை அளிப்பது என்பது இயலாத காரியம்.
எனவே, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிப்பதற்கு ஒரு சில கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.