லண்டனில் இருந்து இந்தியா வந்த தம்பதிக்கு கொரோனா பீதியில் மக்கள் சாப்பிட உணவு கொடுக்காமலும், தங்குவதற்கு இடம் கொடுக்காமலும் ஒதுக்கிய நிலையில் பொலிசாரும், அதிகாரிகளும் அவர்களுக்கு உதவியுள்ளனர்.
லண்டனை சேர்ந்த Daniel Halahan (42) மற்றும் அவர் மனைவி Reihan (40) ஆகிய இருவரும் சுற்றுலா விசா மூலம் ஆறு வாரங்களுக்கு முன்னர் இந்தியா வந்தனர்.
பின்னர் கடந்த 1ஆம் திகதி கேரளாவுக்கு வந்த நிலையில் இடுக்கியில் உள்ள சுற்றுலா தளத்தை சுற்றி பார்க்க திங்கட்கிழமை வந்தனர்.
அங்கு தம்பதிக்கு எந்த கடையிலும் உணவு வழங்கப்படாததோடு, தங்குவதற்கும் யாரும் இடமளிக்கவில்லை. கொரோனா பீதியால் இருவரையும் மக்கள் புறக்கணித்தனர்.
பைக்கில் இருவரும் பல இடங்களுக்கு சென்று உணவு கேட்டும் யாரும் தரவில்லை. இதனால் Daniel மற்றும் Reihan ஆகிய இருவரும் செய்வதறியாது பரிதாப நிலையில் தவித்தனர்.
காவல்துறை அதிகாரி சுபிச்சன் ஜோசப்புக்கு இந்த விடயம் தெரியவந்ததையடுத்து தம்பதியை தேடி வந்த அவர் அவர்களிடம் பேசினார்.
இருவருக்கும் யாரும் உணவு தராததால் மிகுந்த பசியுடன் இருந்ததை உணர்ந்து Daniel,Reihanக்கு சுபிச்சன் உணவு வாங்கி கொடுத்தார்.
பின்னர் இருவரையும் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்று அவர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்தார்.
இந்நிலையில் லண்டன் தம்பதியினரை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்ல மாவட்ட நிர்வாகமும் சுகாதாரத் துறையும் நடவடிக்கை எடுத்துள்ளது.