ஜேர்மனி அதிபர் ஏஞ்சலோ மெர்க்கலின் பழமைவாத கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியின் (சி.டி.யு) தலைமையை ஏற்கும் வேட்பாளர்களில் ஒருவரான ஜேர்மனியின் பிரெட்ரிக் மெர்ஸ்க்கு கொரோனா வைரஸ் உறுதியானது.
ஞாயிற்றுக்கிழமை எனக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அடுத்த வாரம் இறுதி வரை நான் தனிமைப்படுத்தப்பட்ட வீட்டில் தங்குவேன்.
அதிர்ஷ்டவசமாக, எனக்கு லேசான முதல் மிதமான அறிகுறிகளே உள்ளது. திட்டமிடப்பட்டிருந்த அனைத்து நிகழ்வுகளும் ரத்து செய்யப்பட்டது. சுகாதாரத் துறையின் அறிவுறுத்தல்களை நான் கண்டிப்பாக பின்பற்றுகிறேன் என 64 வயதான மெர்ஸ் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்துவ ஜனநாயகக் கட்சியின் புதிய தலைவருக்கான தேர்தல் ஏப்ரல் 25ம் திகதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், கொரோனா காரணமாக திகதி அறிவிக்கப்படாமல் தேர்தலை ஒத்திவைப்பதாக கட்சி தரப்பில் அறிவிக்கப்பட்டது.
தலைவர் பதவிக்கு போட்டியிடும் 3 வேட்பாளர்களில் மெர்ஸ் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் கட்சியின் அடுத்த தலைவராக தேர்வாக அதிக வாய்ப்பு இருப்பதாக உள்ளுர் ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளது.
சமீபத்தில், கொரோனா காரணமாக மெர்ஸ் உட்பட மற்ற வேட்பாளர்கள் தலைவர் பதவிக்கான தங்களது தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.