கொரோனா வைரஸ் அபாயத்தை எதிர்கொள்ளும் வகையில் அனைத்து தனியார் மருத்துவமனைகளையும் அரசுடமையாக்கி ஸ்பெயின் அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஸ்பெயின் நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 168 பேர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர்.
இதுவரை அந்நாட்டில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 510 என அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,409 என அதிகரித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து மக்கள் குடியிருப்பை விட்டு வெளியே வர வேண்டாம் என ஸ்பெயின் அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
வேலைக்கு செல்வதற்கும் உணவு மற்றும் மருத்துவ காரணங்களுக்காக மட்டுமே குடியிருப்பை விட்டு வெளியே வர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஸ்பெயின் முழுவதும் 15 நாட்களுக்கு மருத்துவ அவசர நிலை பிறப்பிக்கப்படுவதாக பிரதமர் பெட்ரோ சான்செஸ் தெரிவித்திருந்த நிலையில்,
கொரோனா அபாயத்தை எதிர்கொள்ளும் வகையில் அனைத்து தனியார் மருத்துவமனைகளையும்அரசுடமையாக்கி ஸ்பெயின் அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஸ்பெயினில் கடந்த 24 மணிநேரத்தில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில்,
சிகிச்சையை தீவிரப்படுத்தும் நோக்கத்திலும், வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கத்திலும், ஸ்பெயினின் சுகாதாரத் துறை அமைச்சர் சால்வடார் இல்லா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு அதிகபட்சமாக சீனாவில் 3 ஆயிரத்து 226 பேர் பலியாகி உள்ளனர். அடுத்ததாக இத்தாலி நாட்டில் 2 ஆயிரத்து 503 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இத்தாலியை அடுத்து ஈரான் நாட்டில் கொரோனா பாதிப்புக்கு இதுவரை 988 பேர் மரணமடைந்துள்ளனர். மொத்தம் 16,169 பேர் பாதிப்புக்கு இலக்காகியுள்ளதும் தெரியவந்துள்ளது.
உயிர்ச்சேதம் மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் கொரோனா பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவால் உலகப் பொருளாதார வளர்ச்சி 0.2 சதவீதம் வரையில் வீழ்ச்சியைச் சந்திக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.