கொரோனா வைரஸ் பாதிப்புக்கு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் இத்தாலி, டென்மார்க், பிரான்ஸ் நாடுகளை அடுத்து பிரித்தானியாவும் முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒருபகுதியாக தேவையற்ற கூட்டங்களை தவிர்க்க வேண்டும் என்றும், மதுபான விடுதிகள், உணவு விடுதிகள் உள்ளிட்ட அனைத்தையும் தவிர்க்க வேண்டும் எனவும்
குடியிருப்பில் இருந்தே பணியாற்றவும் பொதுமக்களை பிரித்தானியா அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இதனிடையே சமீபத்திய நாட்களில் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டதால் லண்டன் சுரங்க ரயில் சேவையானது குறைந்த எண்ணிக்கையிலான சேவையை இயக்கும் என்று லண்டன் மேயர் சாதிக் கான் தெரிவித்துள்ளார்.
லண்டன் நகரம் முற்றாக முடக்கப்படவில்லை என்ற போதும், மக்கள் நிச்சயமாக ஒரு சமூக அக்கறையுடன் செயல்பட முயற்சிக்கின்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே எப்போதும் பரபரப்பாகவே காணப்படும் லண்டனின் தெருவீதிகள் வெறிச்சோடி காணப்படுவதாகவும்,
வணிக வளாகங்கள் உணவகங்கள் உள்ளிட்ட எங்கேயும் மக்கள் நடமாட்டம் இல்லை எனவும் உள்ளூர் பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஒரே நாளில் 407 பேர் இலக்காகியுள்ள நிலையில் இன்று மட்டும் 16 பேர் மரணமடைந்துள்ளனர்.
மொத்தம் கொரோனாவால் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 71 என அதிகரித்துள்ளதை அடுத்து பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,950 என தெரியவந்துள்ளது.