கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உலகளாவிய ரீதியில் இதுவரை 7500பேர் வரை பலியாகியுள்ளனர்.
அத்துடன் 185 ஆயிரம் பேர் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றை அடுத்து தாஜ்மஹாலை மூடிவிட இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
தாஜ்மஹாலுக்கு நாள் ஒன்றுக்கு 70ஆயிரம் பேர் வரை சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் முகமாக இந்திய அரசாங்கம் அதனை மூடிவிட தீர்மானித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு 137பேர் உள்ளாகியுள்ளனர். மூன்று பேர் இதுவரை மரணமாகியுள்ளனர்.
60ஆயிரம் பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதேவேளை இத்தாலியில் கொரோனா வைரஸினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 2500ஆக உயர்ந்துள்ளது.
ஸ்பெய்னில் 182 பேர் மரணமாகினர். பிரான்ஸில் 175 பேர் மரணமாகினர். 7000பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
ஐரோப்பிய ஒன்றியம் அடுத்து வரும் 30 நாட்களுக்கு தமது நாடுகளுக்கு இடையிலான எல்லைகளை மூடிவிட தீர்மானித்துள்ளது.
ஈரானில் 988 பேர் மரணமாகியுள்ளனர். அங்கு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக அரசியல் கைதிகள் உட்பட்ட 85ஆயிரம் சிறைக்கைதிகள் தற்காலிகமாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
பிரித்தானியாவில் 71 பேர் மரணமாகினர். இதனையடுத்து மக்களுக்கும் வர்த்தகர்களுக்கும் 400 பில்லியன் டொலர்களை ஒதுக்கீடு செய்து உதவியளிக்க அந்த நாட்டின் பிரதமர் உறுதியளித்துள்ளார்.
அமெரிக்க மக்களுக்கு நிவாரணைங்களை வழங்க தயார் என்று ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உறுதியளித்துள்ளார். இதற்காக 850 பில்லியன் டொலர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையில் கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு பின்னணியில் அமெரிக்க படையினர் இருப்பதாக சீனா குற்றம் சுமத்தியிருந்த நிலையில் அமரிக்க ஜனாதிபதி கொரோனா வைரஸ் சீனாவின் வைரஸ் என்று கருத்துரைத்திருந்தார்.
எனினும் இதனை சீனா கண்டித்துள்ளது. இதேவேளை கொரோனா வைரஸ் ஆரம்பித்த சீனாவில் நேற்று ஓருவர் மாத்திரமே புதிதாக இந்த தொற்றுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று சீன தகவல்கள் தெரிவிக்கின்றன.