கொரோனா என்ற கொடிய வைரஸ் நோயால் இன்று முழு உலகமும் பேராபத்தைச் சந்தித்துள்ளது. மக்கள் தங்கள் உயிர்களைக் கையில் பிடித்தவாறு வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில், இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது ஜனநாயகம் அல்ல. எனவே, எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி நடத்தத் திட்டமிட்டுள்ள பொதுத்தேர்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உடன் பிற்போட வேண்டும்.
இவ்வாறு வலியுறுத்தியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன்.
நாட்டின் இன்றைய நிலைமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
கொரோனாவின் அச்சுறுத்தலால் நாட்டின் இன்றைய நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருக்கின்றது. இந்த நேரத்தில் மக்களின் உயிர்ப் பாதுகாப்பே முக்கியம். எனவே, சகல வழிகளிலும் நாட்டு மக்களைப் பாதுகாக்கும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
அந்த நடவடிக்கைகள் அரசின் சுயநல அரசியலைக் கருத்தில்கொண்டனவாக அமையக்கூடாது. மக்களின் பாதுகாப்புக் கருதியும் நாட்டின் நலன் கருதியும் ஜனாதிபதி செயற்பட வேண்டும்.
இந்தநிலையில், நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது ஜனநாயகம் அல்ல. மக்களை வீட்டுக்குள் முடக்கி வைத்துவிட்டு தேர்தலை நடத்தினால் அது நீதியான தேர்தலாக இருக்கவேமாட்டாது.
எனவே, ஏப்ரல் 25ஆம் திகதி நடத்தத் திட்டமிட்டுள்ள நாடாளுமன்றத் தேர்தலை ஜனாதிபதி உடன் பிற்போட வேண்டும்.
இது எமது கோரிக்கை மட்டுமல்ல நாட்டிலுள்ள பெரும்பாலான கட்சிகளினதும் ஜனநாயக ரீதியிலான – நீதியான தேர்தலை விரும்பும் நாட்டு மக்களினதும் ஒருமித்த கோரிக்கையாக இருக்கின்றது என்றார்.