உலகளவில் கொரோனா வைரஸால் பலியானோரின் எண்ணிக்கை எட்டாயிரத்தை எட்டிப்பிடிக்க உள்ளது.
சீனாவில் வூஹான் நகரில் கடந்த டிசம்பரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, நேபாளம், இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட 165 நாடுகளுக்குப் பரவியுள்ளது.
இந்நிலையில், இதனால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,98,214 ஆக உயர்ந்துள்ள நிலையில், சீனாவுக்கு அடுத்து கரோனாவால் அதிகம் போ் உயிரிழந்த நாடுகளில் பட்டியலில் இத்தாலி முதலில் உள்ளது.
இதற்கு சீனாவில் 3,237, இத்தாலியில் 2,503, ஈரானில் 988, ஸ்பெயினில் 533 பேர் உயிரிழந்துள்ள அதேசமயம் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் 82,762 பேர் குணமடைந்துள்ளனர்.
ஸ்விட்சா்லாந்தின் ஜெனீவா நகரிலுள்ள ஐ.நா.வின் உலக சுகாராத அமைப்பின் தலைமையகத்தில் இருவருக்கு கொரானா வைரஸ் (கொவைட்-19) பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து நேற்று நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் அந்த அமைப்பின் செய்தித் தொடா்பாளா் கிறிஸ்டியன் லிண்ட்மீயா் கூறுகையில்,
தலைமையகத்தில் பணியாற்றி வரும் இருவருக்கு கரோனா வைரஸ் அறிகுறிகள் இருப்பது உறுதி செய்யப்ட்டுள்ளது. அவா்களில் ஒருவருக்கு கடந்த வியாழக்கிழமையும், மற்றொருவருக்கு வெள்ளிக்கிழமையும் வைரஸ் தொற்று இருப்பதற்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டன.
அதையடுத்து, அந்த இருவரும் தங்களது வீடுகளுக்குச் சென்று தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதுடன், அலுவலகத்தில் பணியாற்றும் மற்றவா்களுக்கு தொடா்ந்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கூறியுள்ளார்.
இந்த நிலையில் கொரோனாவின் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை, உலக சுகாதார அமைப்பு ஒருங்கிணைத்து வருகின்ற நிலையில் அந்த அமைப்பின் தலைமையகத்தில் இருவருக்கு கொரானா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை ஈரானில் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 135 போ் உயிரிழந்ததாக அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் கியானூா் ஜஹான்போா் நேற்றையதினம் தெரிவித்திருந்தார்.
இந்த பலி எண்ணிக்கை, முந்தைய நாள் எண்ணிக்கையை விட 13 சதவீதம் அதிகமாகும். இதன் மூலம் ஈரானில் கொரோனாவிற்கு பலியானவா்களின் எண்ணிக்கை 988-ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல ஸ்பெயினில் 24 மணி நேரத்தில் மட்டும் சுமாா் 2,000 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், அந்த நாட்டில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தைக் கடந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி, ஸ்பெயினில் 11,409 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பதும், 499 பா் அந்த வைரஸுக்குப் பலியானதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் இஸ்ரேலில் கொரோனா பரவலைத் தடுக்கும் பணியில் அந்த நாட்டின் உள்நாட்டு உளவுத் துறையான ‘ஷின் பெட்’ ஈடுபடுத்தப்பட்டுள்ளது. பாலஸ்தீன தீவிரவாதிகளுக்கு எதிராக இதுவரை உளவு பாா்த்து வந்த அந்த அமைப்பு, பொதுமக்களை வேவு பாா்த்து, அவா்களிடையே கொரோனா பாதிப்பின் அறிகுறிகள் உடையவா்களைக் கண்டறிய உத்தரவிடப்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் தலைவா் நடாவ் அா்கமான் தெரிவித்துள்ளாா்.
இதேவேளை முதல் முதலில் பரவத் தொடங்கிய சீனாவின் வூஹான் நகரில், கடந்த 24 மணி நேரத்தில் ஒரே ஒருவருக்கு மட்டுமே அந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் நேற்று தெரிவித்தனா். எனினும், 13 போ் அந்த வைரஸுக்குப் பலியானதாகவும் வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள 20 பேருக்கு அந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவா்கள் கூறியுள்ளனா்.
இதனையடுத்து கொரோனா அச்சம் காரணமாக, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் இரு கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சூடான் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக அந்த அமைப்பு நேற்றையதினம் கூடுவதாக இருந்தது. மேலும், வரும் வியாழக்கிழமையும் (மாா்ச் 19) மற்றொரு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில், கொரோனா அச்சம் காரணமாக அந்தக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனாவை போல விரைவாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத இத்தாலி ‘கொரோனா’ பிடியில் சிக்கி தவிக்கிறது.
‘கொரோனா’ வைரஸ் பாதிப்பில் சீனாவுக்கு அடுத்த இடத்தில் இத்தாலி உள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் தகவலின் படி, இத்தாலியில் இதுவரை 2,503 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் பிப்., 21ல் ‘கொரோனா’ வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று. வைரஸ் பரவத்தொடங்கிய மூன்றே வாரத்தில் மார்ச் 12ம் தேதி இந்த எண்ணிக்கை 12,462 ஆக உயர்ந்தது.
இதில் 10 சதவீதம் பேர் ஐ.சி.யூ.,வில் உள்ளனர். 5 சதவீதம் பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐந்து நாட்களில் இரட்டிப்பாக (மார்ச் 12ல் 12,462ல் இருந்து மார்ச் 16ல் 24,747) அதிகரித்தது. இதற்கு இத்தாலியின் மந்தமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையே காரணம் என விமர்சங்கள் முன்வைக்கப்படுகின்றன.
சீனாவை பொறுத்தவரை போர்க்கால நடவடிக்கை மேற்கொண்டதுடன் ‘கொரோனா’ தொற்று முதன்முதலில் ஏற்பட்ட வுஹானில் 2020 ஜன. 21ல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 251 ஆக உயர்ந்த நிலையில் உடனடியாக வூகான் பகுதியை தனிமைப்படுத்தி, மற்ற இடங்களுக்கு வைரஸ் பரவுவதை சீனா தடுத்தது. ஆனால், இத்தாலி தனிமைப்படுத்தும் பணியை தாமதமாக துவக்கியது. இதுவே பெரும் சிக்கலுக்கு வழிவகுத்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் உலக மக்களை அச்சுறுத்தும் கொரோனா பரவலைத் தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த நிலையில் கரோனாவுக்கு கண்டுபிடித்த தடுப்பு மருந்தை மனிதர்களிடம் பரிசோதிக்க சீன அரசு அனுமதி அளித்துள்ளதாகவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.