கொரோனா அறிகுறியுடன் தனிமைப்படுத்தப்பட்ட பெண் ஒருவர் தடையை மீறி நீச்சல் குளத்தில் குளித்ததால் பொலிசார் அவரை கைது செய்த சம்பவம் ஸ்பெயினில் நிகழ்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் பாதிக்கப்பட்டவ்ரகளை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த நிலையில், ஸ்பெயின் நாட்டின் கேனரி தீவில் உள்ள டெனஃரீப் என்ற இடத்தில் உள்ள ஹோட்டலில் கொரோனா அறிகுறியுடன் பிரிட்டன் பெண் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டார்.
மேலும், பலத்த பாதுகாப்புடன் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், திடீரென தடையை மீறி அங்குள்ள நீச்சல் குளத்தில் இறங்கி அவர் குளிக்க ஆரம்பித்தார். இதனால் மற்ற சுற்றுலா பயணிகள் குளத்தில் இறங்க பயந்து கரையில் நின்றனர்.
இதனையறிந்த பொலிசார் உடனே நீச்சல் குளத்துக்கு வந்த அப்பெண்ணை வெளியேறுமாறு அறிவுறுத்தினர். ஆனால் அப்பெண் அதனை பொருட்படுத்தாமல் குளித்துக்கொண்டே இருந்தார்.
இதனால் கோபமடைந்த காவல்துறை அதிகாரி ஒருவர், நீச்சல் குளத்தில் இறங்கி வழுக்கட்டாயமாக அப்பெண்ணை வெளியேற்றி கைது செய்தார். இதை அங்கு இருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த காட்சி பார்வையாளர்களிடம் அதிர்ச்சியையே ஏற்படுத்தியிருக்கிறது.