பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் இன்று இரவு முதல் உணவு விடுதிகள், மதுபான விடுதிகள் உள்ளிட்ட கேளிக்கை விடுதிகள் அனைத்தும் மூடப்படும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இன்று ஒரு நாள் மட்டும் 33 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டு இறந்தவர்கள் எண்ணிக்கை 177 என அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், தற்போதைய சூழல் குறித்து நாட்டு மக்களிடம் விளக்கிய பிரதமர் போரிஸ் ஜான்சன், கொரோனா பரவலை கட்டுப்படுத்த இன்னும் கடுமையான நடவடிக்கைகள் அவசியம் என தெரிவித்துள்ளார்.
இதன் ஒருபகுதியாக நாட்டில் இதுவரை செயல்பட்டுவந்த மதுபான விடுதிகள், உணவகங்கள், கேளிக்கை விடுதிகள், திரையரங்குகள், நாடக அரங்குகள்,
உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டு அரங்கங்கள் என பொதுமக்கள் கூடும் பகுதிகள் அனைத்தும் இன்று இரவு முதல் மூடப்படும் என அறிவித்துள்ளார்.
மேலும், பொதுமக்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தி உள்ளார்.
இது கடினமான காலம் என குறிப்பிட்ட பிரதமர் ஜான்சன், ஆனால் நாம் ஒன்றாக எடுத்துக்கொண்டிருக்கும் இந்த நடவடிக்கைகள் NHS மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு பேருதவியாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஒன்றிணைந்த நமது செயல்பாடுகள் விரைவான குணமடைதலுக்கு வழிவகுக்கும் எனவும் பிரதமர் ஜான்சன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனிடையே பிரித்தானிய மக்கள் தொகையில் சரிபாதி பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகாதவரை பிரதமர் ஜான்சனின் திட்டங்கள் அனைத்தும் தோல்வியில் சென்று முடியவே வாய்ப்பு என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.


















