கோரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் வருகை அதிகரிப்பால் தங்களால் புதிதாக வரும் நோயாளிகளை ஏற்க முடியாது என லண்டனில் உள்ள மருத்துவமனை ஒன்று கைவிரித்துள்ளது.
வடமேற்கு லண்டனின் ஹாரோவில் அமைந்துள்ள நார்த்விக் பார்க் மருத்துவமனை நிர்வாகமே புதிதாக எந்த கொரோனா பாதிக்கப்பட்டவர்களையும் ஏற்க முடியாது என அறிவித்துள்ளது.
குறித்த மருத்துவமனையில் இந்த ஒருவாரத்தில் மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பலனின்றி மூவர் மரணமடைந்துள்ளனர்.
தற்போது தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை அருகாமையில் உள்ள மருத்துவமனைகளுக்கு நார்த்விக் பார்க் மருத்துவமனை நிர்வாகம் அனுப்பி வைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் ஒரு மருத்துவமனை தங்களால் இனி புதிதாக நோயாளிகளை ஏற்க முடியாது என அறிவித்துள்ள முதல் மருத்துவமனை இது என கூறப்படுகிறது.
இதனிடையே கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், உரிய சிகிச்சை கிடைக்காமல் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மருத்துவ சஞ்சிகை ஒன்று வெளியிட்ட தகவலின் அடிப்படையில், லண்டனில் மேலும் இரு மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளை திருப்பி அனுப்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஒரே அறக்கட்டளையின் கீழ் செயல்படும் ராணி எலிசபெத் மருத்துவமனை மற்றும் Lewisham பல்கலைக்கழக மருத்துவமனை ஆகிய இரண்டும் கொரோனா பாதித்தவர்களை சிகிச்சை அளிக்காமல் திருப்பி அனுப்பியுள்ளது.
பிரித்தானியாவை பொறுத்தமட்டில் தலைநகர் லண்டனில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமென கூறப்படுகிறது.