லண்டனுக்கு சென்றுவிட்டு இந்தியா திரும்பிய பிரபல பாடகி கனிகா கபூருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் லக்னோ நகரில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதித்துள்ளனர்.
கனிகா கபூர் லக்னோ விமான நிலையம் வந்திறங்கியதும் அதிகாரிகளின் கொரோனா சோதனையில் இருந்து எப்படி தப்பினர் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
இரண்டு வாரங்கள் தனிமை படுத்தப்படுவதில் இருந்து தப்பிக்க கனிகா கபூர் தவறான வழியை பயன்படுத்தியுள்ளாரா எனவும் கேள்வி எழுந்துள்ளது.
மேலும் தான் லண்டன் சென்று வந்ததை மறைத்து நண்பர்களுக்கு நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஹொட்டல் ஒன்றில் பெரிய விருந்து ஒன்றும் ஏற்பாடு செய்துள்ளார்.
அந்த விருந்தில் முக்கிய பிரபலங்கள் பலர் கலந்து கொண்டுள்ளதாகவும் சுமார் 100 பிரபலங்கள் வரை அந்த பார்ட்டிக்கு வந்திருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.
மேலும் கனிகா கபூர் பிரபலமான அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் குடும்பத்தினருடன் தங்கி வருகிறார்.
தற்போது தமக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை மறைத்ததால் அந்த குடியிருப்பில் வசித்து வரும் பலருக்கும் கொரோனா தொற்று பரவி இருக்குமா என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
அதனால் அந்த குடியிருப்புவாசிகள் அனைவரையும் தனிமைபடுத்தவுள்ளனர். மற்றவர்களின் வாழ்க்கையை இப்படி கேள்விக்குறியாக்கியுள்ள கனிகா கபூருக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்ட பாடகி கனிகா மீது லக்னோ நகர பொலிசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்று இருக்கும் நபர்கள் எண்ணிக்கை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்புவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.