கொரோனா அச்சம் காரணமாக சில நாட்களுக்குள் லண்டன் மூடப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளதைத் தொடர்ந்து, லண்டன்வாசிகள் கிராமப்புறங்களை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
லண்டன் கொரோனாவின் சூப்பர் ஸ்ப்ரெடராக மாறிவரும் நிலையில், இளவரசி யூஜினுடைய உறவினர் ஒருவர் முதல், பெரும் செல்வந்தர்கள், மொடல்கள் என பெரும்பாலானோர் கிராமப்புறங்களில் உள்ள தங்கள் வீடுகளில் சென்று பதுங்கிவிட முடிவு செய்துள்ளனர்.
ஆனால், கிராமப்புறங்களில் இருப்பவர்களை அதை விரும்புவதுபோல் தெரியவில்லை. தயவு செய்து உங்கள் வைரஸை எங்கள் பகுதிக்கு பரப்பிவிடாதீர்கள் என்று அவர்கள் லண்டன்வாசிகளை கேட்டுக்கொண்டுள்ளனர்.
ட்விட்டரில் தங்கள் கோபத்தை வெளிப்படுத்திவரும் பலரும், ஒழுங்காக உங்கள் வீட்டில் அடங்கி இருங்கள், அதை பரப்புபவராக மாறிவிடாதீர்கள் என காட்டமாக கூறி வருகிறார்கள்.
எங்கள் ஊரிலுள்ள பல்பொருள் அங்காடிகளில் உணவும் இல்லை, உங்களையெல்லாம் சமாளிக்கும் அளவில் எங்கள் ஊரும் இல்லை என்கிறார் ஒரு பெண்.
எல்லோரும் எங்கள் ஊரை நோக்கி படையெடுப்பது எல்லோருக்குமே சிக்கலாகிவிடும், தயவு செய்து லண்டனிலேயே இருங்கள் என்கிறார் மற்றொருவர்.