அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலியான சம்பவம் வெளியாகியுள்ளது.
அதே குடும்பத்தைச் சேர்ந்த மேலும் மூவர் தீவிர சிகிச்சையிலும் இருந்து வருகின்றனர்.
நியூ ஜெர்சி மாகாணத்தை சேர்ந்தவர் 73 வயதான கிரேஸ் புஸ்கோ. இவரது 11 பிள்ளைகளில் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கடந்த வாரம் உறுதி செய்யப்பட்டது.
இவர்கள் அனைவரும் ஒன்றாக குடும்ப கூடுகை விழா ஒன்றில் கலந்து கொண்டுள்ளனர். கடந்த புதனன்று பென்சில்வேனியாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த கிரேஸ் புஸ்கோ மரணமடைந்தார்.
கிரேஸ் புஸ்கோ மரணமடையும் சில மணி நேரங்களுக்கு முன்னரே இவரது மகன் கார்மைன் மரணமடைந்திருந்தார். இதன் நான்கு நாட்களுக்கு பின்னர் 55 வயதான ரீட்டா புஸ்கோ-ஜாக்சன் மரணமடைந்தார். கடந்த வியாழனன்று கிரேஸ் புஸ்கோவின் மகன் வின்சென்ட் கொரோனாவால் மரணமடைந்தார்.
கிரேஸ் புஸ்கோ மரணமடையும் இரு நட்களுக்கு முன்னர் மூச்சுவிட கடுமையாக போராடிய நிலையில் அவருக்கு சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா பாதிப்பில் தமது இரு பிள்ளைகள் மரணமடைந்ததை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த கிரேஸ் புஸ்கோ அறிந்திருக்கவில்லை என கூறப்படுகிறது.
இவரது மேலும் மூன்று பிள்ளைகள் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இலக்காகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதில் இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருவதாக கூறப்படுகிறது.
இதனிடையே கிரேஸ் புஸ்கோவின் உறவினர் அனைவரும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தி வருகின்றனர்.
தங்கள் உறவினர்களின் இறுதிச்சடங்கு வழிபாடுகளிலும் அவர்கள் கலந்துகொள்ளவில்லை என கூறப்படுகிறது.
அமெரிக்காவில் கொரோனா சோதனைகளுக்கு அதிக கால தாமதம் ஏற்படுவதாகவும், இது அமெரிக்க மக்கள் அனுபவிக்கும் சுகாதார நெருக்கடியின் அடையாளம் எனவும் கிரேஸ் புஸ்கோ குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.