இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாகி வரும் நிலையில், அந்தநாட்டு பிரதமர் மோடி வலியுறுத்தியதையடுத்து, இன்று இந்தியா முழுவதும் மக்கள்சுய ஊரடங்கை மக்கள் பின்பற்றி வருகின்றனர்.
உலகையே மிரட்டி வந்த கொரோனா வைரஸ் இப்போது இந்தியாவையும் மிரட்ட துவங்கியுள்ளது.
தற்போது இந்தியா கொரோனா வைரஸ் நோயின் இரண்டாவது கட்டத்தில் இருப்பதாகவும், அது மூன்றாவது கட்டத்திற்கு சென்றுவிடக்கூடாது, அதிகமாக பரவிடக் கூடாது என்பதற்காக, கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்தியாவில் இதுவரை கொரோனாவால் 300-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சூழலில் பொதுமக்கள் இன்று சுய ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி உத்தரவிட்டிருந்தார்.
அதாவது இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தி இருந்தார்.
அதன்படி இன்று காலை சரியாக 7 மணிக்கு சுய ஊரடங்கை மக்கள் பின்பற்றத் தொடங்கியுள்ளனர்.
உலக நாடுகளில் 4-வது மற்றும் 5-வது வாரத்தில் கொரோனா வைரஸ் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஏராளமானோரின் உயிரை பலிவாங்கியுள்ளது. இதனை இந்தியாவில் தவிர்க்கும் வண்ணம் இப்படியொரு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுய ஊரடங்கு உத்தரவை அடுத்து அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை அரசு பேருந்துகள் இயங்காது.
கால் டாக்சி, ஆட்டோ போன்றவை பொதுமக்களின் அவசர பயணத்திற்காக மட்டும் இயக்கப்படும்.
மெட்ரோ ரயில் சேவையும் இன்று ரத்து செய்யப்படுகிறது. பயணிகள் ரயில் மற்றும் விரைவு ரயில் சேவையும் இன்று இருக்காது. வணிக வளாகங்கள், தியேட்டர்கள், பூங்காக்கள், கடைகள், உணவகங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன.
நட்சத்திர ஓட்டல்கள் திறந்தே இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. பொதுமக்கள் பெரும்பாலும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
இன்று காலை 7 மணி வரை மட்டுமே பால் விற்பனை நடைபெறும் என்று கூறப்பட்டு இருந்தது. எனவே பொதுமக்கள் அதிகாலையிலேயே எழுந்து பால் பாக்கெட்களை வாங்கி வைத்துக் கொண்டனர்.
அசாம் மாநில கவுகாத்தியில் கடைகள் அனைத்து மூடப்பட்டுள்ளன. இன்று காலை முதலே பொதுமக்கள் யாரையும் வெளியில் காண முடியவில்லை. மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள சாலைகள் எந்தவொரு வாகனமோ, மக்களோ இல்லாமல் வெறிச்சோடி இருந்தது.
இதேபோல் சென்னையின் கடற்கரை சாலைகளில் மக்கள் நடமாட்டம் இல்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொலிசார் மட்டும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் இதே போன்று ஒரு ஊரடங்கு உத்தரவை தற்போது கொரோனா வைரஸால் பல உயிர்களை இழந்து வரும் இத்தாலி போட்டிருந்ததாகவும், ஆனால் அதை அந்நாட்டு மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளாததன் விளையே இப்போது அந்நாடு அதிக உயிர்களை பலி கொடுத்து வருவதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.