யாழ்பாணத்தில் கொரோனோ தொற்றுக்குள்ளான நபர் சுவிட்சர்லாந்திலிருந்து வந்திருந்த கொரோனா காவியென சந்தேகிக்கப்படும் போதகருடன் சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தவர் என தெரியவந்தது.
இதையடுத்து குறித்த போதகரின் ஆராதனைகளில் கலந்துகொண்ட மற்றும் அவருடன் சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தோரை பொலிஸ் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
அந்த வரிசையில் குறித்த போதகரின் ஆராதனை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் எனும் சந்தேகத்தில் மடு மற்றும் நானாட்டான் பிரதேசத்தில் 11 குடும்பங்கள் அவர்களது வீடுகளிலேயே தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.
யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் தொடர்பாக தேடுதலை மேற்கொண்டபோதே மேற்படி குடும்பங்களும் குறித்த ஆராதனையில் கலந்து கொண்டிருந்தமை தெரியவந்துள்ளது.
அந்தவகையில் மடுக்கரை மற்றும் அச்சங்குளம் கிராமங்களில் 5 குடும்பங்களும் , மடுப்பிரதேச செயலகத்திற்கு உற்பட்ட தேக்கம் கிராமத்தில் 6 குடும்பங்களும் அவர்களது வீட்டிலேயே சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டர்.
மேலும் அவர்களுக்கு தேவையான மருத்துவ, சுகாதார ,உலர் உணவு வசதிகளும் வழங்கப்பட்டுள்ளதாக நானாட்டான் பொது சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.