கொரோனாவால் உயிரிழப்போருக்காக பல்லாயிரக்கணக்கான கல்லறைகளை தோண்டுவதற்கான இடங்களை தயாராக வைத்திருக்குமாறு பிரித்தானிய கவுன்சிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனாவுக்கு பலியாவோருக்காக ஒவ்வொரு கவுன்சிலும் கல்லறைகள் தோண்ட 30 இடங்களை தயாராக வைத்திருக்குமாறு, சுமார் 9000 நகர மற்றும் கிராம கவுன்சில்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக The Sunday Mirror பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
பிரித்தானியாவில் கொரோனாவால் 250,000 பேர் வரை உயிரிழக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், அதை எதிர்கொள்வதற்காக இங்கிலாந்து பொது சுகாதாரத்துறை வைத்திருக்கும் திட்டத்தின் ஒரு பகுதி இது என தெரியவந்துள்ளது.
உயிரிழந்தோர் உரிய மரியாதையுடனும் அக்கறையுடனும், அவர்களது குடும்பத்தாரின் விருப்பபடி அடக்கம் செய்யப்படுவதை உறுதிசெய்து கொள்வதாக அரசு செய்திதொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வழக்கமாகவே தங்கள் பகுதியில் நீண்ட காலத்திற்கான திட்டமிடுதல் நடைமுறையில் உள்ளதையடுத்து, உயிரிழந்தோரை அவர்களது பாரம்பரியப்படி அடக்கம் செய்யும் அளவுக்கு போதுமான அளவில் இட வசதி உள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.