COVID-19 தொற்றுநோய் இளவயதினரையும் கடுமையாக நோய்வாய்ப்படுத்தும் என்று இத்தாலிய மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
இத்தாலியில் உள்ள மருத்துவமனைகளில் 20 மற்றும் 30 வயதிற்குட்பட்டவர்கள் கொரோனா வைரஸின் கடுமையான பாதிப்புகளுடன் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
COVID-19 இனால் வயதானவர்களைப் போல இளவயதினர் மோசமாகப் பாதிக்கப்பட மாட்டார்கள் என்ற கருத்துக்கு எதிராக இத்தாலி மருத்துவர்கள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
லோம்படி (Lombardy) மருத்துவமனையின் தீவிர பராமரிப்புப் பிரிவின் தலைவர் மருத்துவர் அன்ரோனியோ பேசென்ரி (Antonio Pesenti) கூறுகையில்,
கொரோனா வைரஸின் கடுமையான தாக்கங்களுடன் பல இளைஞர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள மிகக் கடுமையான நோயாளிகளில் 50% மானவர்கள் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும் மற்றைய 50% மான நோயாளிகள் 65 வயதுக்கு குறைவானவர்கள் என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில் இளைஞர் யுவதிகளும் கொரோனா வைரஸால் இறக்கலாம் அல்லது பல வாரங்களுக்கு மருத்துவமனையில் இருக்கவேண்டியிருக்கும் என்று உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர் கூறியுள்ளார்.