கொரோனா வைரஸ் நிலைமையைப் பயன்படுத்தி ஐக்கிய தேசியக் கட்சியினர் அரசியல் இலாபம் தேட முயற்சிக்கின்றனர் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச குற்றம்சாட்டினார்.
புதிய நாடாளுமன்றம் கூடும் வரை நிதியைச் செலவிடும் அதிகாரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு இல்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.
இதற்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அவர் மேலும் கூறுகையில், “நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் அரச சேவைகளைச் பேணிச் செல்வதற்குத் தேவையான நிதியை ஒருங்கிணைந்த நிதியத்தின் மூலம் பெற்றுக்கொள்வதற்கான அதிகாரம் அரசமைப்பின் ஊடாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஆகவே, கொரோனா வைரஸ் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு அரசிடம் போதிய நிதி வசதி உள்ளதா என்பது தொடர்பில் மக்கள் அச்சத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
கொரோனா வைரஸ் நிலைமையைப் பயன்படுத்தி ஐக்கிய தேசியக் கட்சியினர் அரசியல் இலாபம் தேட முயற்சிக்கின்றனர்.
புதிய அரசு நிதியைப் பெற்றுக்கொள்வதைத் தடுப்பதற்கு நல்லாட்சி குழுவினர் நாடாளுமன்றத்தில் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது.
இந்தநிலையில், ஜனாதிபதியின் அதிகாரம் தொடர்பில் சட்டவாதங்களை முன்வைத்து நாட்டை செயலிழக்கச் செய்யும் முயற்சியைக் கண்டிக்கின்றேன்” – என்றார்