இத்தாலியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட தொகையில் இருந்து 10 மடங்கு அதிகமாக இருக்கலாம் என அதிர்ச்சித் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடாக இத்தாலி பதிவாகியுள்ளது. அந்நாட்டில் இதுவரை ஏறக்குறைய 64 ஆயிரம் பேர் குறித்த நோய்த் தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக உத்தியோகபூர்வ தகவல் தெரிவிக்கிறது.
அத்துடன் குறித்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று இரவு வரை 6 ஆயிரத்து 77 ஆகக் காணப்படுகிறது.
இந்நிலையில், வைரஸ் தொற்று தொடர்பாக தம்மை பரிசீலித்துக்கொள்வதற்காக மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான இத்தாலியர்களே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அதனால் ஆயிரக்கணக்கானவர்களின் தொற்றுக்கள் உறுதிப்படுத்த முடியாமல் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வைரஸ் தொற்று பரிசோதிக்கப்பட்டவர்களில் பத்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதாக சமூகப் பாதுகாப்பு முகவரகத்தின் தலைமை அதிகாரி ஏஞ்செலோ பொரெல்லி (Angelo Borrelli) தெரிவித்துள்ளார்.
மேலும், தனது கணிப்பின்படி ஏறக்குறைய ஆறு இலட்சத்து நாற்பதாயிரம் பேருக்கு இத்தாலியில் கொரோனா தொற்று இருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் குறித்த தகவலானது உலகளாவிய ரீதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.