கொரோனா பரவலைத் தடுப்பதற்காக ஆந்திர காய்கறிச் சந்தையில் வரையப்பட்ட சதுரங்கள் வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன.
சீனாவில் உருவான் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 4 இலட்சத்திற்கும் அதிகமான மக்களைப் பாதித்த நிலையில் இந்தியாவையும் விட்டுவைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றுக்கு வெளிநாட்டினர் 43 பேர் உள்பட 606 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத் துறை உறுதி செய்துள்ளது.
கொரோனா வைரஸைத் தடுப்பதற்காக பிரதமர் மோடி, 21 நாட்கள் கட்டாய ஊரடங்கு உத்தரவை அறிவித்தார். அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியே வரும்போது மக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அரசு எச்சரித்துள்ளது.
ஆந்திராவில் உள்ள ஒரு காய்கறிச் சந்தை இந்த விதிமுறையை மிகச் சரியாகப் பின்பற்றி வருகிறது. விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள பாபிலி நகரச் சந்தையில் காய்கறி வாங்க வேண்டுமென்றால் ஒவ்வொருவரும் இரண்டு மீட்டர் தள்ளி நின்றுதான் வாங்க வேண்டும்.
2 மீட்டர் அளவைக் கூட நம்மால் கவனமாகப் பின்பற்ற முடியாது என்பதுதான் உண்மை. இதனைக் கருத்தில் கொண்டே பாபிலி நகர சந்தை நிர்வாகிகள் ஒரு நூதன முறையைக் கையாண்டுள்ளார்கள். அதன் மூலம் 2 மீட்டர் சரியான இடைவெளி விட்டு ஆங்காங்கே சதுரங்களை வரைந்திருக்கிறார்கள். காய்கறிக் கடையை நோக்கி வந்த வாடிக்கையாளர் தங்கள் முறை வரும் வரை அந்த சதுரத்திலேயே நின்று காத்திருக்க வேண்டும்.
விஜயநகரத்தின் பாபிலி சந்தையில் கடைப்பிடிக்கப்படும் இந்த முறை பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.