இந்தியாவில் அடுத்த சில நாள்களுக்குள் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்கும் என்றும், அதைத் தடுப்பதற்கான போதிய மருத்துவ வசதிகள் கூட நம்மிடம் இன்னும் இல்லை” என்கிற எச்சரிக்கையை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகம் பிரதமர் மோடிக்குக் கொடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த ஜனவரி மாதமே கொரோனா வைரஸ் தாக்கம் சீனாவில் அதிகரித்த நிலையில் , இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் மார்ச் முதல் வாரம் தெரிய ஆரம்பித்ததும்தான், நாள்தோறும் ஒவ்வொரு திட்டமாக மத்திய அரசு அறிவிக்க ஆரம்பித்தது.
இந்நிலையில் பிரதமர் மோடி, நேற்று முன்தினம் நாட்டு மக்களிடம் உரையாற்றியபோது அடுத்த 21 நாள்கள் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தப்போவதாக அறிவித்தார். அத்துடன் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தையும் அவசரமாகக் கூட்டியுள்ளார் மோடி.
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளதால், பல கோடி மக்கள் பொருளாதாரச் சிக்கலை எதிர்கொள்ள வேண்டிவரும் என்பதால் அதற்கு மாற்று ஏற்பாடுகள் குறித்தும், கொரோனா பரவலைத் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் அதில் ஆலோசனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் தற்போது பிரதமர் மோடி காட்டிவரும் அதிரடிக்குப் பின்னால் அவருக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய அதிர்ச்சிக்குரிய தகவல்தான் காரணமாயிருக்கும் என மத்திய அரசுக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள்.
அந்தவகையில் கடந்த 22-ம் தேதி, நாடு முழுவதும் சுய ஊரடங்கு நடைபெற்ற சமயம், வட மாநிலங்களில் பலரும் அன்று மாலை கூட்டம் கூட்டமாக வந்து கைகளைத் தட்டியது அந்த ஊரடங்கின் நோக்கத்தையே கேள்விக்குறியாக்கியது. அதற்குப் பிறகு உலக சுகாதார நிறுவனம் மத்திய அரசுக்கு அளித்த அறிக்கையில் நாளுக்கு நாள் இந்தியாவில் வைரஸ் தாக்கம் அதிகரிக்கும் என்றும் இந்தியாவில் போதிய கட்டுப்பாடுகளை இன்னும் மக்கள் பின்பற்றவில்லை என்றும் எச்சரிக்கை விடுத்தது.
அதற்குப் பிறகே பிரதமர் மோடி மக்களிடம் வைரஸ் குறித்த அச்சம் இல்லாமல் இருக்கிறார்கள் என்ற செய்திக்குறிப்பையும் வெளியிட்டதுடன் உள்நாட்டு விமானப் போக்குவரத்து நிறுத்தம், ரயில் போக்குவரத்து நிறுத்தம் எனப் பல அதிரடிகளை அரசு அறிவித்தது.
ஆனால் அடுத்த இரண்டு நாள்களில் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் கொடுத்த அறிக்கை பிரதமரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
அதாவது இந்தியாவில் தற்போது போதிய அளவில் பரிசோதனை மேற்கொள்ளக் கூட வசதிகள் செய்யப்படவில்லை என்றும், எங்களுடைய ஆய்வின்படி இன்னும் சில நாள்களில் இந்தியாவில் ஒரு லட்சம் நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவலாம். அடுத்த இரண்டு நாள்களில் இந்த வைரஸ் தொற்று மூன்று லட்சமாகப் பரவும். டெல்லியில் மட்டும் இரண்டு லட்சம் நபர்கள் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படலாம். மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களும் கடுமையாகப் பாதிக்கபடும். மக்களிடம் இதுகுறித்த போதிய விழிப்புணர்வு இன்னும் இல்லாமல் இருக்கிறார்கள். பிப்ரவரி மாதம் முதல் அடுத்த இருநூறு நாள்களுக்கு இந்த வைரஸின் வீரியம் இந்தியாவில் அதிகமாக இருக்கும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
மேலும் கடந்த வாரம் முதல் பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, டெல்லி ஆகிய நகரங்களில் இந்த நோயின் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்கிற விவரத்தையும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். மக்கள் நெருக்கம் இந்தியாவில் அதிகம் இருப்பதால் , உடனடியாக அரசு தீவிர நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த வாரம் இந்தியா மிகப்பெரிய ஆபத்தைச் சந்திக்க நேரிடும் என்பதை பிரதமர் அலுவலகத்திற்குத் தெரியப்படுத்தியுள்ளார்கள்.
இந்த எச்சரிக்கைத் தகவல் கிடைத்த பின்பே பிரதமர் நரேந்திரமோடி மூத்த அதிகாரிகளுடன்ஆலோசனை நடத்தியுள்ளார்.
இனி, விழிப்புணர்வு பிரசாரம் செய்துகொண்டிருந்தால் நாடு தாங்காது. இந்தியா அபாயத்தை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறது என்பதால் அதிரடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தபிறகே பிரதமர் உரை நிகழ்த்துவதாக முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அப்போதுதான் ஊரடங்கு உத்தரவு என்கிற முடிவை எடுத்துள்ளார்கள். எனினும் , கொரோனா விஷயத்தில் இந்தியா இன்னும் விழிப்புடன் செயல்பட்டிருக்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவ வல்லுநர்கள்.
குறிப்பாக பிப்ரவரி மாத இறுதிக்கு முன்பாகவே இந்தியாவின் எல்லைகளை மூடியிருக்க வேண்டும். பொதுமக்களிடம் அப்போதே ஊரடங்கு உத்தரவினைப் பின்பற்ற கட்டளையிட்டிருக்க வேண்டும் என்கிற குற்றச்சாட்டுகளை இப்போது வைக்க ஆரம்பித்துள்ளார்கள்.
மக்கள் அடர்த்தி குறைவாக உள்ள ஐரோப்பிய நாடுகளே இந்த நோயின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறும்போது, மக்கள் அடர்த்தி அளவுக்கு அதிகமாக இருக்கும் இந்தியா இந்த விஷயத்தில் முன்னெச்சரிக்கையாக இருந்திருக்க வேண்டும் எனவும் வல்லுனர்கள் சுட்டிகாட்டியுள்ளனர்.
இந்த நிலையில் அடுத்த சில நாள்கள் இந்தியாவிற்கு அச்சம் மிகுந்த நாள்களாகவே கடந்து செல்லும் என்கிற நிலையே இப்போது அங்கு இருப்பதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.