கொரோனா பாதிப்பால் சீனாவில் இறந்தவர்கள் எண்ணிக்கையை சமீபத்தில் இத்தாலி முந்திய நிலையில், தற்போது பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் அமெரிக்கா சீனாவை முந்தியுள்ளது.
சீனாவில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 81,285. இந்த எண்ணிக்கையை தற்போது அமெரிக்கா முந்தியுள்ளது.
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 15,452 என பதிவாகியுள்ளது.
இதனையடுத்து அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 83,663 என தகவல் வெளியாகியுள்ளது.
அங்கு ஒரே நாளில் 182 பேர் மரணமடைந்துள்ள நிலையில் மொத்தம் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 1,209 என பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், உலக செல்வந்தர்களில் ஒருவரான பில் கேட்ஸ் ஜனாதிபதி டிரம்புக்கு முக்கிய ஆலோசனை ஒன்றை வழங்கியுள்ளார்.
கடந்த 100 ஆண்டுகளில் உலகம் எதிர்கொண்டிராத இந்த கொரோனா வைரஸ் தொடர்பில், அதனை கட்டுப்படுத்த நீங்கள் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தால் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு,
அமெரிக்காவை மொத்தமாக முடக்குவது தான் தமது முதன்மை பணியாக இருக்கும் எனவும், அதுவே வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டுவர உதவும் என்றார்.
சீனர்கள் மொத்தமாக 6 வாரங்கள் தங்களை குடியிருப்புக்குள் முடக்கிக் கொண்டனர். தற்போது கொடிய கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.
அதே பாணியை நாம் நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
மொத்தமாக 20 நாட்கள் முடக்கப்பட்டாலே வைரஸ் பரவலின் தாக்கம் கண்டிப்பாக கட்டுக்குள் இருக்கும் எனவும், அதை நாம் கண்கூடாக காண முடியும் எனவும் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் போன்ற உலக நாடுகளை அச்சுறுத்தும் ஒரு சூழல் எதிர்காலத்தில் ஏற்பட வாய்ப்பிருப்பதாக 2015 ஆம் ஆண்டே பில் கேட்ஸ் எச்சரித்திருந்தார்.
தற்போதைய சூழலில் இன்னொரு தொற்று நோய் நெருக்கடிக்கு நாம் தயாராக இல்லை எனவும், ஆனால் அறிவியலில் முன்னேற்றங்கள் உள்ளன, நம்மால் கண்டிப்பாக எதிர்த்து போராட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் பில் கேட்ஸ்.