கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இத்தாலியில் 712 பேர், ஸ்பெயினில் 718 பேர், பிரான்சில் 365 பேர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர்.
சீனாவின் வுஹான் நகரில் இருந்து உருவானதாக கருதப்படும் கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பரவியுள்ளது.
கொரோனா பாதிப்பின் கோரப்பிடியில் தற்போது ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் சிக்கி தத்தளித்து வருகின்றது.
உலகம் முழுவதும் இதுவரை 5 லட்சத்து 27 ஆயிரத்து 788 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக இதுவரை 23 ஆயிரத்து 937 பேர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர்.
சீனாவில் அதன் தாக்கம் கட்டுக்குள் வந்த நிலையில், ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகியவை கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ளது.
இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 712 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் அந்நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 215 ஆக அதிகரித்துள்ளது.
ஸ்பெயினிலும் கொரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 718 பேர் பலியாகியுள்ளனர். இதனையடுத்து அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 4,365 ஆக உயர்ந்துள்ளது.
இத்தாலி, ஸ்பெயினை தொடர்ந்து பிரான்ஸ் நாட்டிலும் கொரோனா அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் வைரஸ் தாக்குதலுக்கு 365 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அந்நாட்டில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 696 ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கையில் அமெரிக்கா சீனாவை விஞ்சியுள்ளது.
சீனாவில் கொரோனாவால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 81,285. ஆனால் அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,312 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 82,523 என அதிரடியாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.