கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் முடக்க நிலையில் சிக்குண்டுள்ள நிலையில், அங்குள்ள ஒரேயொரு நாடு மட்டும் பெரியளவில் மாற்றமின்றி இயல்பு வாழ்க்கையை மேற்கொண்டு வருகிறது.
ஆம், ஐரோப்பிய நாடான ஸ்வீடனில் பனிக்காலம் முடிந்து இப்போதுதான் கோடைக்காலம் தலையை காட்ட ஆரம்பித்துள்ளது. அந்த நாட்டின் தலைநகரில் மக்கள் எப்போதும் போல் கோடைக்காலத்தை கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள்.
மரியாட்டர்கெட் பகுதியிலுள்ள தோர் சிலையின் அருகே மக்கள் குடும்பத்துடன் ஐஸ்கிரீமை சுவைத்துகொண்டிருக்கிறார்கள். இளைஞர்கள் சாலையெங்கும் ’ஹாப்பி-ஹவரில்’ கடைகளில் வழங்கப்படும் தள்ளுபடிகளில் வேண்டியதை விரும்பி வாங்கிகொண்டிக்கிறார்கள்.
ஸ்வீடன் தலைநகரில் கடைகளும், இரவுநேர வீடுகளும் இன்னமும் திறந்தே இருக்கின்றன. ஆனால், சென்ற ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரே இடத்தில் 50 பேருக்கு மேல் கூடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ஸ்வீடனில் நிலைமை இவ்வாறிருக்க, அதற்கு அருகிலுள்ள நாடான டென்மார்க்கில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் கூடுவதற்கும், பிரிட்டனில் மக்கள் வீடுகளை விட்டே வெளியேற கூடாது என்ற சூழ்நிலையும் நிலவி வருகிறது.
“ஒவ்வொருவருக்கும் மிகுந்த பொறுப்புள்ளது”
ஸ்வீடனில் சாலைகள் முன்பைவிட அமைதியாக காணப்படுகின்றன. தலைநகர் ஸ்டோக்ஹோமில் மக்கள் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவது 50 சதவீதம் வரை குறைந்திருக்கிறது.
அதேபோன்று, இங்குள்ள பாதிக்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்டாக்ஹோம் நகரத்தில் உள்ள வணிகத்தை உலகளாவிய தரத்துக்கு நிர்வகிக்க ஏற்படுத்தப்பட்டுள்ள ஸ்டாக்ஹோம் பிசினஸ் ரீஜன் எனும் அரசு அமைப்பு, தங்களது நகரத்திலுள்ள குறைந்தது 90 சதவீத நிறுவனங்கள் வீட்டிலிருந்தே பணியாளர்கள் பணிபுரிவதை நிர்வகிக்கும் கட்டமைப்பை கொண்டிருப்பதாக கூறுகிறது.
“எந்தெந்த நிறுவனங்களில் இது சாத்தியமோ அவை இம்முறையை கடைபிடிக்கின்றன” என்று அந்த அமைப்பின் தலைமை செயலதிகாரியான ஸ்டாபன் இங்கிவரஸ்சன் கூறுகிறார்.
இவரது கருத்தும் ஸ்வீடன் அரசின் கருதுகோளும் ஒன்றைதான் வலியுறுத்துகின்றன: சுய-பொறுப்புணர்வு. கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்காமலேயே கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியுமென்று ஸ்வீடனின் சுகாதாரத்துறை அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் கருதுகிறார்கள்.
ஸ்வீடனில் கடுமையான விதிகளை விட அதிகமான வழிகாட்டுதல்கள் உள்ளன. உதாரணமாக, ஒருவர் நோய்வாய்ப்பட்டவராகவோ அல்லது வயதானவராகவோ இருந்தால் வீட்டிலேயே இருப்பது, கைகளை கழுவுதல், மற்றும் தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது, அத்துடன் வீட்டிலிருந்து வேலை செய்வது போன்றவற்றில் கவனம் செலுத்துமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
பொதுவெளியில் மக்களின் செயல்பாடு குறித்த வழிமுறைகளை ஸ்வீடன் அரசு இன்னமும் வழங்கவில்லை.
ஸ்வீடனில் இதுவரை 3,800 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், 110 பேர் உயிரிழந்துள்ளனர்.
“பெரியவர்கள் பெரியவர்களை போல நடந்துகொள்ள வேண்டும். அச்ச உணர்வையோ அல்லது புரளிகளையோ பரப்ப கூடாது” என்று சென்ற வாரம் நாட்டு மக்களிடம் உரையாற்றிய ஸ்வீடன் பிரதமர் ஸ்டீபன் லோஃப்வென் கூறினார்.
“இந்த பிரச்சனையில் ஒருவரும் தனித்திருக்கவில்லை, ஆனால் அனைவருக்கும் மிகுந்த பொறுப்பு உள்ளது.”
வானளாவிய நம்பிக்கை
பிரதமரின் தொலைக்காட்சி உரையை கேட்ட மக்களில் பெரும்பாலானவர்கள் அவர் முன்வைத்த விடயங்களை ஏற்றுக்கொண்டதாக ஸ்வீடன் முழுவதும் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளதாக நோவஸ் எனும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஸ்வீடனை பொறுத்தவரை, பொது மக்களிடையே அரசு அதிகாரிகள் மீது மிகுந்த நம்பிக்கை நிலவுவதன் காரணமாக அரசு வழங்கியுள்ள வழிகாட்டுதல்களை மக்கள் ஏற்றுக்கொண்டு நடப்பதாக கருதப்படுகிறது.
ஸ்வீடனின் இந்த வித்தியாசமான அணுகுமுறைக்கு அந்த நாட்டின் மக்கள்தொகை பரவலும் ஒரு முக்கிய காரணம் என்று சொல்லலாம்.
மத்திய தரைக்கடல் நாடுகள் போலன்றி ஸ்வீடனில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட வீடுகளில் ஒரேயொரு நபர் மட்டுமே வசிப்பதால் அங்கு நோய்த்தொற்று பரவலுக்கான வாய்ப்பு குறைகிறது.
ஸ்வீடனை பொறுத்தவரை, அங்குள்ள மக்கள் வெளிப்புறங்களை பெரிதும் நேசிப்பவர்களாக உள்ளனர். எனவே, கடுமையான விதிகளை அமல்படுத்துவதை விடுத்து, மக்களுக்கு உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் மகிழ்ச்சியான சூழலை ஏற்படுத்தி தருவது, அவர்கள் வழிகாட்டுதல்களை பின்பற்றுவதற்கு காரணமாக இருக்கலாம் என்று அதிகாரிகள் கருதுகின்றனர்.
“வைரஸ் பரவலால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் மற்றும் பொருளாதார பாதிப்புகளைக் குறைப்பது குறித்து நாம் ஒருசேர திட்டமிட வேண்டும்” என்று ஸ்டாக்ஹோம் சேம்பர் ஆஃப் காமர்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்ட்ரியாஸ் ஹாட்ஜியோர்கியோ கூறுகிறார்.
“இங்குள்ள வணிக சமூகம், ஸ்வீடன் அரசாங்கமும் அதன் மக்களின் அணுகுமுறையும் பல நாடுகளை விட செயல் முறைக்கு ஒத்த வகையில் இருப்பதாக கருதுகிறது.”
“இது போதுமானது அல்ல”
ஐரோப்பாவின் மற்ற நாடுகள் பரிதவித்துக்கொண்டிருக்கும் நிலையில், ஸ்வீடனின் தனித்துவமான அணுகுமுறை குறித்து சிலர் கேள்வியெழுப்ப தொடங்கியிருக்கிறார்கள்.
“மக்கள் பரிந்துரைகளை ஏற்று நடக்க வாய்ப்புள்ளது என்று நான் நினைக்கிறேன். ஆனால் இதுபோன்ற சிக்கலான சூழ்நிலையில், இது போதுமானதாக எனக்கு தெரியவில்லை” என்று ஸ்வீடனிலுள்ள மருத்துவ பல்கலைக்கழகமான கரோலின்ஸ்கா இன்ஸ்டிடியூட்டில் தொற்றுநோயியல் நிபுணராக இருக்கும் மருத்துவர் எம்மா ஃபிரான்ஸ் கூறுகிறார்.
கடைகள், உடற்பயிற்சி கூடங்கள் உள்ளிட்ட பொது மக்கள் கூடும் இடங்களில் ஒருவர் எப்படி பழக வேண்டும் என்பதற்கு “தெளிவான வழிகாட்டுதல்கள்” வழங்கப்பட வேண்டுமென்று அவர் வலியுறுத்துகிறார்.
எனினும், கொரோனா வைரஸ் பரவலால் தங்களது வணிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் சில்லறை வியாபாரிகள் தங்களது துயரம் விரைவில் துடைத்தெறியப்படும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள்.