கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்து வரும் நிலையில், எங்கள் நாட்டில் கொரோனாவால் ஒருவர் கூட பாதிக்கவில்லை என்று வடகொரியா தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக உலக அளவில் இதுவரை ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 50000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் இந்த வைரஸை எப்படி கட்டுப்படுத்துவது என்று, ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பியா நாடுகள் திணறி வருகின்றன.
ஆனால் வடகொரியா எங்கள் நாட்டில் ஒருவருக்கு கூட கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதன் பலனாக யாரும் நோய் தொற்றுக்கு ஆளாகவில்லை என அந்நாட்டின் அவசரகால தொற்றுநோய் தடுப்பு துறை இயக்குநர் பாக் மியாங்க் சு கூறி உள்ளார்.
மேலும், எங்கள் நாட்டிற்குள் நுழையும் அனைத்து பணியாளர்களுக்கும் ஆய்வுகள் மற்றும் தனிமைப்படுத்தல் போன்ற அனைத்தும் முன்கூட்டிய விஞ்ஞான நடவடிக்கைகளையும் நாங்கள் மேற்கொண்டுள்ளோம்.
அனைத்து பொருட்களையும் முழுமையாக கிருமி நீக்கம் செய்கிறோம், அத்துடன் எல்லைகளை மூடுவது மற்றும் கடல் மற்றும் விமான பாதைகளைத் தடுப்பது போன்றவற்றில் கவனமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே ஒரு முறை வடகொரியா தங்கள் நாட்டில் கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரிவித்திருந்த நிலையில், தற்போது மீண்டும் அதை உறுதிப்படுத்தும் விதமாக வடகொரியா தெரிவித்துள்ளது.
ஆனால், சுகாதார நிபுணர்கள், வட கொரியா வைரஸ் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ளது, அதன் மோசமான சுகாதார அமைப்பு காரணமாக பாதிப்பு கண்டிப்பாக இருக்கும், இருப்பினும், வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் அதை மறைக்க முயற்சிப்பதாக கூறுகின்றனர்.
அதே சமயம் உலகநாடுகள் கொரோனாவால் இருந்து தப்பிப்பதற்கு போராடி வரும் நிலையில், வடகொரியா சமீபத்தில் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.