பிரதமர் மகிந்த ராஜபக்ச பேஸ்புக் பாவனையாளர்களுக்கு விசேட சவால் ஒன்றினை விடுத்திருக்கிறார். இதனை ஏற்றுக் கொள்பவர்களை தான் ஊக்கப்படுத்துவதாகவும் அவர் கருத்துப் பதிவு செய்துள்ளார்.
நாட்டில் தற்போது கொரொனா தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து நாடு முழுவதும் முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இளைஞர்கள், யுவதிகள், மற்றும் அரச தனியார் ஊழியர்கள் பலர் வீடுகளிலேயே முடக்கப்பட்டிருக்கிறார்கள்.
இதனையடுத்து சில இளைஞர்கள் வீதிக்கு வருகிறார்கள். வெளியே வருபவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். இச்சூழ்நிலையில், பொது மக்கள் ஓய்வு நேரத்தினை சரியாக பயன்படுத்துமாறு ஏற்கனவே அரசாங்கம் அறிவுறுத்தல் விடுத்திருந்தது.
புத்தகங்களை படித்தல், வீட்டு வேலைகளை செய்தல், பெற்றோருடன் நேரத்தை செலவு செய்தல், வீடுகளை அழகுபடுத்தல் உட்பட பல வேலைகளை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
இச்சூழலில் பொது மக்களை ஊக்கப்படுத்தும் விதமாக பிரதமர் மகிந்த ராஜபக்சவும் ஒரு சவாலை விடுத்திருக்கிறார்.
இது தொடர்பில் தனது முகநூல் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
#HomeGardenChallenge இல் பங்கேற்பதில் ஷிராந்தியும் நானும் பெருமகிழ்ச்சியடைகிறோம். கொரோனாவைரஸ் தொற்றுப்பரவல் உலகைப் பெருமளவில் பாதித்துள்ள அதேநேரத்தில், எமது எதிர்காலச் சந்ததிகளுக்காக நிலைத்திருக்கக்கூடிய வாழ்க்கைமுறைகளைப் பின்பற்ற வேண்டிய அவசியத்தையும் இது கற்றுக்கொடுத்துள்ளது.
அனைவரையும் தத்தமது பங்கை இவ்விடயத்தில் ஆற்றுமாறு நான் ஊக்குவிக்கிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரதமரின் இந்தச் சவாலை இளைஞர்களும் நாட்டு மக்களும் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.