இந்தியாவின் மத்தியபிரதேசத்தில் தாயின் நினைவுதினத்தில் 1500 பேருக்கு நபர் வைத்த விருந்து காரணமாக, கொரோனா தொற்று அதிகமாக பரவியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞரான சுரேஷ், துபாயில் ஹோட்டல் ஒன்றில் வெயிட்டராக பணியாற்றி வந்திருக்கிறார். கொரோனா பாதிப்பு காரணமாக பலரும் சொந்த நாடுகளுக்குத் திரும்பியதால் சுரேஷும் துபாயிலிருந்து கடந்த மாதம் 17ம் திகதி மனைவி மோரினாவுடன் வந்துள்ளார்.
இந்நிலையில் சுரேஷின் தாயாருக்கு மார்ச் 20-ம் தேதி நினைவுநாள் என்பதால், தாயாரை கௌரவிப்பதறற்காக அன்று 1,500 பேருக்கு ஒரே நேரத்தில் உணவு வழங்க ஏற்பாடு செய்து அனைவரையும் சாப்பிட வைத்து அசத்தியுள்ளார்.
பின்பு மார்ச் 25ம் திகதி சுரேஷுக்கு கொரோனா அறிகுறிகள் இருந்துள்ளதால், நான்கு நாட்கள் கழித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மனைவியையும் பரிசோதனை செய்து பார்த்துள்ளனர்.
இதில் இருவருக்கும் கொரோனா இருந்தது உறுதியாகிய நிலையில், இருவரும் கடந்த 20 தினங்களாக யாரையெல்லாம் தொடர்புகொண்டார்கள் என்று விசாரித்த போது இவ்வாறு விருந்து வைத்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், சுரேஷின் நெருங்கிய உறவினர்கள் 23 பேரை தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு நடத்திய சோதனையில் 8 பெண்கள் உட்பட 10 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
மேலும் மற்ற 13 பேரை கண்காணிப்பில் வைத்திருக்கும் நிலையில், விருந்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசோதனை செய்ய வேண்டும் என்று அம்மாநில அரசு கலக்கத்துடன் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் உயர் மருத்துவ அலுவலர் ஒருவர் கூறுகையில், துபாயிலிருந்து கிளம்பும் போது சுரேஷிற்கு எந்தவொரு அறிகுறி இல்லாத நிலையில், அவரது மனைவி மட்டும் காய்ச்சலுடன் வந்துள்ளார்.
இப்படியொரு இக்கட்டான சூழ்நிலையில் இவ்வாறு விருந்து வைத்துள்ளது மிகப்பெரிய தவறு என்று கூறியதோடு மக்கள் அரசுக்கு ஒத்தழைத்தால் மட்டுமே கொரோனாவை விரட்ட முடியும் என்று கூறியுள்ளார். தற்போது குறித்த காலணிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.