ஜப்பானில் டோக்கியோ உள்ளிட்ட 6 பிரதேசங்களுக்கு ஒரு மாத காலம் அவசர நிலையைப் பிறப்பிக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.
அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து ஜேர்மனியிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது.
ஐரோப்பியக் கண்டத்தில் பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிக்கும் நாடுகளில் ஒன்றான ஜேர்மனியிலும் கொரோனா தன் கோர முகத்தைக்காட்டி வருகிறது.
அங்கு இறப்பு விகிதம் குறைவாக இருப்பினும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அங்கு 4 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அந்நாட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்து 584 ஆக அதிகரித்துள்ளது. மேலும் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக ஜேர்மனியில் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டி உள்ளது.
இதனிடையே ஜப்பானில் 3 ஆயிரத்து 500க்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ள நிலையில் 85 பேர் உயிரிழந்துள்ளனர்.
எஞ்சிய நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை மிகவும் குறைவே என்றாலும் டோக்கியோவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.
தொற்றைக் கட்டுப்படுத்த ஜப்பான் அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் டோக்கியோ உள்ளிட்ட 6 பிரதேசங்களுக்கு ஒரு மாத காலம் அவசர நிலையைப் பிறப்பிக்க உள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார்.
மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் தடுப்பது, வர்த்தக நிறுவனங்கள் மூடுவது உள்ளிட்ட நடவடிக்கைகளை அந்தந்த பிரதேச ஆளுநர்கள் அறிவிப்பார்கள் என்றும் அபே கூறியுள்ளார்.
ஆனால் இந்த அவசர நிலையானது கடுமையாக இருக்காது எனவும், அந்தந்த பிரதேசங்களுக்கு ஏற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அபே சுட்டிக்காட்டியுள்ளார்.