இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றை இல்லாதொழிக்க ஐரோப்பிய ஒன்றியம் 22 மில்லியன் யூரோக்களை நன்கொடையாக வழங்க தீர்மானித்துள்ளது.
அறிக்கை ஒன்றை விடுத்துள்ள இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியம் சுகாதாரம், விவசாயம் மற்றும் சுற்றுலாத்துறை ஆகியவற்றை மீள கட்டியெழுப்ப இந்த நிதியை பயன்படுத்துமாறு கேட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரசை கட்டுப்படுத்தல் அதனால் ஏற்பட்டுள்ள சவால்கள் மற்றும் பிரச்சினைகளை குறைத்தல் ஆகியவற்றுக்கு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதன் உறுப்பு நாடுகள் வழங்கும் இந்த நிதி உதவியை பயன்படுத்தவும். தற்போதைய நிலைமையில் சிறிய சர்வதேச பங்காளர்கள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளனர்.
இன்றுவரை இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை மிக குறைவாகும் இது பாராட்டதக்க சூழ்நிலை ஆகும்.
ஆகவே இலங்கையின் முயற்சிகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் சுகாதாரம், விவசாயம் மற்றும் சுற்றுலாத்துறை ஆகிய துறைகளை மீள கட்டியெழுப்ப ஐரோப்பிய ஒன்றியம் உதவ தீர்மானித்துள்ளது.
இதற்காக உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஊடாக 2 மில்லியன் யூரோக்களை நன்கொடையாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் மருத்துவ உபகரணங்கள் மற்றும் வைத்திய பரிசோதனைகளுக்கும் ஐரோப்பிய ஒன்றியம் உதவிகளை வழங்கும்.
இலங்கையின் விவசாய துறையை ஊக்குவிக்க 16.5 மில்லியன் யூரோக்களை வழங்க உள்ளோம்.
இந்த உதவியின் மற்றுமொரு நோக்கம் கிராமபுறங்களில் தனிப்பட்ட மூலதன சுழற்சியை மேம்படுத்தவதாகும் அத்துடன் ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் உள்ள சிறு வியாபாரிகளுக்கு உதவுவதாகும்.
அத்துடன் இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த 3.5 மில்லியன் யூரோக்களை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இலங்கையில் இன்று வரை பதிவான குறைந்தபட்ச கொவிட் -19 தொற்றாளர்கள் குறித்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.
ஐரோப்பிய ஒன்றியமும் அதன் உறுப்பு நாடுகளும் இந்த முயற்சியை ஆதரிப்பதற்கான சிறந்த நடைமுறைகளை ஆராய்ந்து வருகின்றன.
கொவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான உலகளாவிய போராட்டம் மற்றும் எதிர்வரும் சவால்களை எதிர்கொள்ள ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கனவே 15.6 பில்லியனை யூரோவை ஒதுக்கியுள்ளது. ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலமே கொரோனா வைரஸையும் ஒழிக்க முடியும்.