இணையத்தளம் ஊடாக பொருட்கள், சேவைகளை வழங்கும் சர்வதேச வணிக நிறுவனம் ஒன்றின் அமெரிக்க வங்கியில் உள்ள வங்கிக் கணக்குக்குள் சட்ட விரோதமாக ஊடுருவி ( ஹெக் செய்து) 1400 மில்லியன் ரூபா வரை, இலங்கையின் பிரதான தனியார் வங்கியொன்றில் உள்ள 36 வங்கிக்கணக்குகளுக்கு வைப்பிலிட்டு முன்னெடுக்கப்பட்ட பாரிய மோசடி தொடர்பில் சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விஷேட விசாரணைகளை தொடர்கின்றது.
குறித்த இணையத்தளம் ஊடாக, தாம் கோரிய சேவையை வழங்க முடியாமல் குறித்த நிறுவனம் பெற்றுக்கொண்ட பணத்தொகையை மீள கையளிக்கும் விதமாக இந்த மோசடி புரியப்பட்டுள்ள நிலையில், இது குறித்து 7 சந்தேக நபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மேலும் 31 சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களை தேடி வருவதாக சி.ஐ.டி.யின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
எவ்வாறாயினும் இதுவரையில் சி.ஐ.டி. முன்னெடுத்துள்ள விசாரணைகளில், மோசடி செய்யப்பட்ட 1400 மில்லியன் ரூபாவில் 900 மில்லியன் ரூபாவை சி.ஐ.டி.யினர் மீட்டுள்ளனர்.
குறித்த 36 வங்கிக்கணக்குகளுக்கும், ஹெக் செய்யப்பட்டு அனுப்பட்டுள்ள பணம், பின்னர் அந்த கணக்குகளில் இருந்து பல்வேறு வங்கிகளில் உள்ள பல கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
சி.ஐ.டி.யின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நுவன் வெதிசிங்கவின் ஆலோசனையின் பிரகாரம் விஷேட விசாரணைகள் இடம்பெறுகின்றன.