அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக பெண்ணொருவர் செல்போனில் இருந்து உறவினர்களுக்கு மெசேஜ் அனுப்பிய நிலையில் கணவரே அவரை கொலை செய்துவிட்டு கொரோனா என நாடகமாடியது தெரியவந்துள்ளது.
ப்ளோரிடாவை சேர்ந்தவர் டேவிட் ஆண்டனி. இவர் மனைவி கிரிட்சேன்.
கடந்த மாதம் 13ஆம் திகதி கிரிட்சேன் செல்போனில் இருந்து அவர் உறவினர்களுக்கு ஒரு மெசேஜ் வந்தது.
அதில், எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது, அதனால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளேன் என கூறப்பட்டிருந்தது. ஆனால் இது தொடர்பில் சந்தேகமடைந்த உறவினர்கள் பொலிசில் புகார் கொடுத்தனர்.
பொலிசார் குறித்த மருத்துவமனையில் விசாரித்த போது கிரிட்சேன் என்ற பெயரில் கொரோனா நோயாளி யாரும் இல்லை என கூறினார்கள்.
இதையடுத்து அவர் வீட்டுக்கு சென்ற போது சமையலறையில் இரத்தம் படிந்த துணி இருந்தது.
மேலும் படுக்கையறையிலும் இரத்தம் படிந்திருந்ததும் அவர் கொல்லப்பட்டதும் தெரியவந்தது.
கிரிட்சேன் பக்கத்து வீட்டில் பொலிசார் விசாரித்த போது அவர்கள் கூறுகையில், சில காலமாக டேவிட் – கிரிட்சேன் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
மேலும் கிரிட்சேன் கணவரிடம் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மேலும் 13ஆம் திகதி பெண்ணொருவர் வேண்டாம், வலிக்கிறது என அழுதுகொண்டே கத்தும் சத்தம் கேட்டது என கூறினார்கள்.
இதையெல்லாம் வைத்து டேவிட் தான் மனைவியை கொலை செய்திருப்பார் என உறுதி செய்த பொலிசார் அதை மறைக்க கொரோனாவால் மனைவி உயிரிழந்ததாக நாடகமாடவே இவ்வாறு செய்தார் என கண்டுபிடித்தனர்.
மேலும் தலைமறைவாக இருந்த அவரை நியூ மெக்சிகோவில் வைத்து கைது செய்தனர்.
கொலை செய்யப்பட்ட கிரிட்சேனின் உடல் இன்னும் கிடைக்காத நிலையில் டேவிட்டிடம் நடத்தப்படும் விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.