அமெரிக்காவில் கொரோனாவால் மரணமடைந்த எவரும் உரிமை கோராத சடலங்களை மட்டும் கைவிடப்பட்ட தீவில் கூட்டமாக புதைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனாவால் அதிக சேதங்களை எதிர்கொண்டுவரும் நகரமாக அமெரிக்காவின் நியூயார்க் மாறியுள்ளது.
நியூயார்க்கில் மட்டும் இதுவரை கொரோனாவால் சிகிச்சை பலனின்றி 7,844 பேர் மரணமடைந்துள்ளனர். மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 172,358 என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், கொரோனாவால் மருத்துவமனைகளில் கைவிடப்பட்ட அல்லது உரிமை கோர எவருமற்ற ஏழைகளின் சடலங்களை நியூயார்க்கின் அருகே அமைந்துள்ள ஹார்ட் தீவில் புதைக்கும் நடவடிக்கைகள் துவக்கப்பட்டுள்ளது.
பொதுவாக விபத்து மற்றும் நோய் காரணமாக மருத்துவமனைகளில் மரணமடையும் உரிமை கோரப்படாத சடலங்களை ஹார்ட் தீவில் புதைப்பது வழக்கம்.
அந்தவகையில் வாரம் 25 சடலங்களையாவது ஹார்ட் தீவில் புதைத்து வந்துள்ளனர். ஆனால் தற்போது கொரோனாவால் இறப்பு வீதம் எகிறுவதால் அந்த எண்ணிக்கையானது வாரம் 120 என அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஹார்ட் தீவில் அனாதை சடலங்களை நிர்வாகத்தின் அனுமதியுடன் புதைத்து வருவதாக கூறும் மேயர் அலுவலக அதிகாரிகள்,
தற்போது கொரோனாவால் இறக்கும் ஏழைகளையும் இங்கே புதைப்பதாக தெரிவித்துள்ளனர். கொரோனாவால் மரணமடையும் நபர்களின் சடலங்களை இரண்டு வார காலம் பாதுகாக்கப்படும் எனவும்,
அதுவரையில் உரிமை கோராத சடலங்களை அனாதை சடலங்களாக கருதி, ஹார்ட் தீவுக்கு அனுப்புவதாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவிக்கின்றது.
நியூயார்க் நகரில் மட்டும் ஆதரவற்ற 70,000 பேர் சாலை ஓரங்களில் அல்லது அரசு காப்பகங்களில் வாழ்ந்து வருகின்றனர்.
நியூயார்க் போன்று அமெரிக்காவின் சிகாகோ, லாஸ் ஏஞ்சல்ஸ், டெட்ராய்ட், பிலடெல்பியா மற்றும் சியாட்டில் உள்ளிட்ட நகரங்களும் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் மட்டும் கொரோனாவால் இதுவரை 17,000 பேர் இறந்துள்ளனர். 470,000 பேர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.