கொரோனா பலி எண்ணிக்கை அதிகரிப்பால் பலியானோரின் உடல்களை அடக்கம் செய்வதற்கான பைகளுக்கு தற்போது லண்டன் முழுவதும் கடும் தட்டுப்பாடு நிலவுவதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த வருடம் டிசெம்பர் மாதம் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் தற்போதுவரை உலகளவில் ஒரு லட்சத்திற்கும் பேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் 200 இற்கும் மேற்பட்ட நாடுகளை இந்த கொரோனா தொற்றிக்கொண்டுள்ளது. இதன் தாக்கத்தின் வீரியத்தால் உலகமே ஸ்தம்பிதமடைந்துள்ளது.
கொரோனாவை ஒழிப்பதற்கு அனைத்து நாடுகளும் தம்மாலான முயற்சியில் ஈடுபட்டுவருவதுடன் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளன.
கொரோனா தொற்று 200 இற்கு மேற்பட்ட நாடுகளை தொற்றிக்கொண்டாலும் குறிப்பாக இத்தாலி பிரான்ஸ் ஸ்பெயின் அமெரிக்கா பிரித்தானியா போன்ற நாடுகளில் அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தி வந்தது.
இந்நிலையில் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருவதால் பொது சுகாதாரத்துறைக்கு பல்வேறு நெருக்கடிகளை ஏற்படுத்தி இருக்கிறது.
கொரோனாவுக்கு பலியானோரின் உடல்களை அடக்கம் செய்வதற்காக நோயாளர் காவு வண்டியில் ஓட்டுநர்கள் எடுத்துச்செல்லும்போது வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை அறைகளில் அவர்களுக்கு இதுவரை பிளாஸ்டிக் பிணப் பைகள் வழங்கப்பட்டு வந்தன.
அதில் உடலை மூட்டைபோல் எளிதில் கட்டி விடலாம். இந்த பைகளுக்கு தற்போது இங்கிலாந்து முழுவதும் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.
இதனையடுத்து உடலை மூடி எடுத்துச்செல்ல வசதியாக 2 பிளாஸ்டிக் படுக்கை விரிப்புகளை கொடுத்து வந்தனர்.
தற்போது அதுவும் ஒன்றாக குறைக்கப்பட்டு விட்டது. இது நோயாளர் காவு வாகன டிரைவர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. அத்துடன் உடலை சுமக்கும் வைத்தியசாலை ஊழியர்கள், தங்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்றிக்கொள்ளுமோ? என்ற அச்சத்தில் பணியாற்றி வருகின்றனர். என அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.




















