மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு நெல் கொண்டு செல்ல இன்றிலிருந்து தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அரிசி ஆலைகள் திறந்து இயங்க வேண்டும் என மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தெரிவித்தனர்.
அரசினால் அனைத்து அரிசி ஆலைகளும் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டதையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து அரிசி ஆலை உரிமையாளர்களையும் சந்திக்கும் விசேட கூட்டம் இன்று (13) மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் இடம்பெற்றது.
அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் பட்டினியினால் பாதிக்கப்படாமலிருக்க அனைத்து அரிசி ஆலைகளும் திறக்கப்பட்டு இயங்க வேண்டும் எனவும், மாவட்டத்தினுடைய அரிசித் தேவையினைப் பூர்த்தி செய்த பின்னரே பிற மாவட்டங்களுக்கு அரிசி விநியோகிக்க வேண்டும் எனவும்,
அரசி கட்டுப்பாட்டு விலைக்கே விற்பனை செய்ய வேண்டும் எனவும் அரசாங்க அதிபர் அரிசி ஆலை உரிமையாளர்களைக் கேட்டுக் கொண்டார்.
அத்துடன் மாவட்டத்தின் எந்த இடத்திலிருந்தும் வியாபாரிகள் அரிசியினைக் கொள்வனவு செய்யமுடியும் எனவும் அதற்கான வசதிகள் செய்துதரப்படும் எனவும் அரிசி ஆலை உரிமையாளர்கள் இலாப நோக்கமற்று மக்களுக்கு சேவை வழங்க முன்வரவேண்டுமெனவும் அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இவ்விசேட கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந்த், காணிப் பிரிவு மேலதிக அரசாங்க அதிபர் நவரூபரஞ்சினி முகுந்தன், மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லக்ஸ்ரீ விஜயசேன, இரானுவத்தின் 231 ஆவது படைப்பரிவின் கட்டளை அதிகாரி கேனல் ஜனக பல்லேகும்புர, நுகர்வோர் அதிகார சபை மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பதிகாரியும் கிழக்கு மாகாண உதவிப்பணிப்பாளருமான ஆர்.எப். அன்வர் சதாத் மற்றும் மாவட்டத்தின் அரிசி ஆலை உரிமையாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.