ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பந்தமாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய குற்றவியல் விசாரணை திணைக்களம், ஜனாதிபதி சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை கைது செய்துள்ளதாக அந்த திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
புத்தளம் பிரதேசத்தில் குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகள் இந்த சட்டத்தரணியை கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் றிசார்ட் பதியூதீனின் சகோதரரான ரியாஜ் பதியூதீனை குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகள், புத்தளத்தில் நேற்று கைது செய்தனர்.
இவர் தற்போது குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை கைது செய்ய அவரை குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகள் பின் தொடர்ந்து வருவதாக நேற்று தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்த சட்டத்தரணி முன்னாள் அமைச்சர் றிசார்ட் பதியூதீன் சம்பந்தப்பட்ட வழக்குகளில் மாத்திரமல்லாது, பெரும் பரப்பரப்பை ஏற்படுத்திய மருத்துவர் ஷாபி தொடர்பான வழக்கிலும் ஆஜராகி வாதாடி வந்துள்ளார்.
மேலும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவி வகித்த போது நாடாளுமன்றத்தை கலைத்து வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினரான பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் தாக்கல் செய்திருந்த மனுவின் சார்பிலும் ஹிஸ்புல்லா ஆஜராகி வாதாடியிருந்தார்.