லண்டனில் 8 பிள்ளைகளின் தந்தை ஒருவர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வருவதாக மருத்துவர்கள் கருதிய நிலையில், திடீரென்று அவர் மரணமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனில் கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வந்துள்ள 34 வயது Nicu Urzica என்பவரே மருத்துவமனையில் இருந்து குடியிருப்புக்கு திரும்பலாம் என எண்ணிய நிலையில் திடீரென்று மரணமடைந்தவர்.
தற்போது இவரது மனைவி லிதியா மற்றும் 8 பிஞ்சு குழந்தைகள் அனாதையாக மாறியுள்ளனர்.
திரான்சில்வேனியா பகுதியை பூர்வீகமாக கொண்ட Urzica பத்து நாட்களுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
சளி போன்ற லேசான அறிகுறிகளுடன் ஒரு வார காலம் அவதிப்பட்ட அவர், பின்னர் வேலைக்கு திரும்பியுள்ளார். தொடர்ந்தும் முடியாமல் போகவே,
மூச்சுத்திணறல் மற்றும் கடுமையான தலைவலியுடன் உடனடியாக மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் ஆக்ஸிஜன் அளிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்துள்ளார்.
ஒருவார காலம் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தவர் பின்னர் பொது வார்டில் மாற்றப்பட்டுள்ளார்.
அவர் குணமடைந்து வருவதாக கருதிய மருத்துவர்களும், அவரை குடியிருப்புக்கு அனுப்ப முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் திடீரென்று அவரது உடல் நிலை மோசமடையவும், ஏப்ரல் 11 ஆம் திகதி அவர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார் என மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.
சொந்த நாடான ருமேனியாவில் இறுதி சடங்கைத் திட்டமிட்டுள்ள அவரது குடும்பத்தினர் தற்போது சடலத்தை எடுத்துச் செல்ல முயற்சிக்கின்றனர்.
தற்போது பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் கொரோனாவால் தனித்து விடப்பட்ட குடும்பத்திற்கு உதவும் பொருட்டு நிதி திரட்டி வருகின்றனர்.