வடக்கில் யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்படவுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியுடனான நேற்றைய சந்திப்பில் இது தொடர்பாக ஆராயப்பட்டதாகவும், வடக்கு ஆளுனர் மற்றும் பொலிசாருடன் ஆராய்ந்து இது தொடர்பான இறுதி முடிவெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
யாழில் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் தவிர்ந்த வடக்கின் ஏனைய மாவட்டங்களான கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியாவில் ஊரடங்கை படிப்படியாக தளர்த்தும் ஆலோசனை வழங்கப்படவுள்ளது.
யாழ் மாவட்டத்தின் ஊரடங்கை உடனடியாக தளர்த்தும் சாத்தியமில்லை. இன்னும் சில நாட்கள் கண்காணிப்பு அவசியமானது. ஆனால் யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளின் ஊரடங்கை படிப்படியாக தளர்த்த நடவடிக்கையெடுக்கப்படும்.
யாழில் கொரோனா அபாயமற்ற பகுதிகளில் முதலில் ஊரடங்கு தளர்த்தப்படும். யாழில் முதலில் ஊரடங்கு தளர்த்தப்படும் பகுதிகளாக, அபாயமற்ற பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள தீவகம், தென்மராட்சி, மருதங்கேணி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகள் இருக்கும் என்றார்.